“கூன கிழவி நல்ல குமரி போல் சூல்
கொண்டு குழந்தை பெற்றுத்தந்திட
கொஞ்சிடுவோம்!
பேசாத ஊமைகளை பேசும்படி செய்வோம்
பெரிய மலையை எங்கள் மயிரில் கட்டி அணிவோம்
வஞ்சி வந்தாளய்யா, மாமலைக் குறவஞ்சி வந்தாளய்யா….”
என்று சொர்ண விராலிநாதர் மீது குறத்தி பாடும் பாடலை, அழகாக தன்னுடைய மாணவிகளுக்காக கற்றுத் தருகிறார் முத்துக்கண்ணம்மாள். அவரின் பாடலுக்கும் தாளத்திற்கும் ஏற்ப மிக அழகாக நடனமாடுகின்றனர் அவருடைய மாணவிகள். முத்துக்கண்ணமாள் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஆவணப்படம் ஒன்றில் இடம் பெற்றிருக்கும் இந்த காட்சிகளை பார்க்கும் போது, மனதில் சட்டென தோன்றி மறைகிறது அரை நூற்றாண்டில் நாம் எத்தனை வெகுஜன மக்களின் கலையை, ஒரு தொலைத்திருக்கின்றோம் என்ற கேள்வி.
ஜனவரி 25ம் தேதி அன்று மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. தமிழகத்தின் விராலிமலையை சேர்ந்த சதிர் நடனக்கலைஞர் முத்துக்கண்ணம்மாளுக்கு இந்த விருதை வழங்கி கவுரப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
தன்னுடைய தந்தை விராலிமலை ராமச்சந்திர நட்டுவனார் நடனம் கற்றுத்தர 7 வயதில் இருந்தே சதிர் ஆடி வருகிறார் வருகிறார் முத்துக்கண்ணம்மாள். 7-வது தலைமுறையாக சதிர் நடனம் ஆடும் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்திருப்பது குறித்து பேசினோம். அவருடைய குரலில் இருக்கும் மகிழ்ச்சிக்கும், அவருடைய குடும்பத்தினர் மத்தியில் காணப்பட்ட மகிழ்ச்சியும் வார்த்தைகளால் விளக்க இயலாத ஒன்றாகவே இப்போதும் இருக்கிறது.
”பாட்டெல்லாம் நாங்களே கற்றுக் கொள்வோம். அனைத்தும் மனப்பாடமாக தெரியும். எங்களுக்கு நட்டுவனார்கள் தேவையில்லை. நாங்களே பாடல் பாடி நாங்களே நடனம் ஆடிக் கொள்வோம். பாம்பு நடனமும், மகா சிவராத்திரியின் போது குறத்தி வேடமிட்டும் ஆடுவோம்” என்று பேச துவங்கினார் விராலிமலை முத்துக்கண்ணம்மாள். “இன்று தான் சதிர் குறித்து பலருக்கும் பரவலாக தெரிய வருகிறது. பெங்களூரு, கோவை மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து இங்கே வந்து சதிர் கற்றுக் கொள்ளும் பரதநாட்டிய கலைஞர்களும் இருக்கின்றனர். அதே சமயத்தில் பரதநாட்டிய கலைஞர்களுக்கு சதிர் கற்று தர பல நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்றிருக்கின்றேன்” என்று அவர் தொடர்ந்து பேசினார்
பாரம்பரிய இசை மற்றும் நடன பரம்பரையை சேர்ந்த குடும்பங்களில் இறைப்பணி செய்வதற்காக பெண்களுக்கு பொட்டுக்கட்டும் வழக்கம் நம் சமூகத்தில் வெகு நாட்களாக பின்பற்றப்பட்டு வந்தது. விராலிமலை சண்முகநாதன் திருக்கோவிலில் இறைப்பணி செய்வதற்காக பொட்டுக்கட்டப்பட்ட அவர், தேவதாசி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வெகுசில பெண்களில் ஒருவராக இருக்கிறார். இன்று தமிழகத்தின் கடைசி சதிர் நடனக் கலைஞராகவும் அவர் இருக்கிறார் என்பது கண்ணே முன்னே ஒரு நெடிய வரலாற்றை, பண்பாட்டை கொண்ட நடனக்கலை முடிவுக்கு வருகிறது என்ற அபாயத்தையே சுட்டுகிறது.
சண்முகநாதன் கோவிலில் இறைப்பணி செய்வதோடு மட்டுமின்றி புதுக்கோட்டை அரண்மனையிலும் நடனக் கலைஞராக பணியாற்றி உள்ளார் முத்துக்கண்ணம்மாள். திரைத்துறையில் பணியாற்றிய தண்டபாணி என்பவரை மணந்து கொண்ட அவருக்கு ராஜேந்திரன் என்ற மகனும், கண்ணாமணி என்ற மகளும் உள்ளனர். கண்ணாமணி இந்த கலையை கற்றுக் கொள்ள அதிக விருப்பம் காட்டவில்லை என்றாலும் தலைமுறை கடந்து கண்ணாமணியின் பேத்திகளுக்கு, இன்றும் சதிர் நடனம் கற்றுத் தருகிறார் முத்துக்கண்ணம்மாள்.
விராலிமலையில் சதிர்
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் அவைகளில் சதிர் ஆடப்பட்டது. விராலிமலையை சேர்ந்த குஞ்சம்மா என்பவர் தஞ்சையில் சதிர் கற்று வந்து விராலிமலையில் அவருடைய மகள்கள் அம்மிணியம்மா, நாகம்மாவுக்கும் சதிர் கற்றுக் கொடுத்தனர். பின்பு விராலிமலை முருகன் கோவில் இறைத் தொண்டாற்றிய 32 பேருக்கும் அவர்கள் தான் சதிர் கற்றுக் கொடுத்தனர். இந்த இறைப்பணியாற்றும் பெண்டிர்கள் தீபாரதனையின் போது குலுப்பம் பாடுவார்கள். ஊஞ்சல், நலங்கு பாடல்கள் பாடுவதும் நடனம் ஆடுவதும் அவர்களின் பணிகளில் மிக முக்கிய ஒன்றாகும்.
ஆலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், தில்லானா, நோட்டுஸ்வரம் (Note Swaram) என்ற ஆங்கில வாத்தியங்களுக்கு ஆடும் நடனத்துடன், குறத்தி நடனம், பாம்பு நடனம் போன்றவற்றையும் அக்காலத்தில் பாரம்பரிய நடன பரம்பரையில் வந்த பெண்கள் ஆடினார்கள். கோவில்கள் மற்றும் அரசவை நிகழ்வுகளில் மட்டுமின்றி, பெரிய குடும்பங்களில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வுகளிலும் சிறப்பு மரியாதையை ஏற்று அவர்கள் நடனம் ஆடினார்கள்.
எஸ். சண்முகநாதன் என்பவர் இயக்கிய தேவரடியார் இன் சதிர் - தி லைஃப் ஆஃப் முத்துக்கண்ணம்மாள் (Devaradiyaar in Sadir – The Life and Art of Muthukannammal) என்ற 1 மணி நேர ஆவணப்படத்தில் முத்துக்கண்ணம்மாளின் வாழ்க்கை, சதிர் நடனத்தின் வரலாற்றுப் பின்புலம், சதிர் பிற்காலத்தில் எப்படி பரதமாக மாறியது என்பது குறித்து மேலும் பல விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அரசின் சீர்திருத்த நடவடிக்கையும், சதிர் நடன கலைஞர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளும்
இந்தியா விடுதலை அடைந்த பிறகு 1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி அன்று இந்து பெண்களை கோவிலுக்கு பொட்டுக்கட்டுவதை தடை செய்யும் வகையில் சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பொதுவாழ்வைக் காட்டிலும் ”இல்லற வாழ்வே மரியாதை அளிக்கும்" என்ற மேம்போக்கான கருத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளவும் தேவதாசி பெண்கள் கோவில்களில் நடனமாடவும் தடை விதிக்கப்பட்டது. இசை மற்றும் நடனத்தில் சிறந்து விளங்கிய கலை மரபினருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரண்மனைகள், ஜமீன்கள், கோவில்களில் இருந்து கிடைக்கபெற்ற மரியாதையும், மானியமும் நின்று, சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் நிறுத்திப் பார்க்கப்பட்ட பெண்கள் பிறகு பொது நிகழ்வுகளில் பங்கேற்கவும் அழைக்கப்படுவதும் குறைந்து போனது. சுயமரியாதையுடன், நிதி ரீதியாக சுதந்திரமாகவும் இருந்த இவர்களின் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின.
”எக்காலத்திலும் இறைப்பணி செய்ய அம்மா ஒரு போதும் மறுத்ததே இல்லை. விரலூரில் நடைபெறும் முருகன் - வள்ளி -தெய்வானை திருமண வைபமாக இருந்தாலும் சரி, தேர் இழுக்கும் முன்பும், தெப்பத்திருவிழாவின் போதும் அம்மாவின் நடனம் எப்போதும் இருக்கும். இன்று அந்த முருகனின் அருளால் தான் என்னுடைய அம்மாவிற்கு இத்தகைய ஒரு உயரிய விருது கிடைத்துள்ளது” என்று மகிழ்ச்சி பொங்க பேசுகிறார் ராஜேந்திரன்.
“மொத்தமாக 32 சதிர் நடனக்கலைஞர்கள் சண்முகநாதன் கோவிலில் இறைப்பணி செய்தார்கள். காலங்கள் ஓடின, அரண்மனையில் பணியாற்றிய போதும் நிலமோ எந்த விதமான சொத்துக்களோ எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. தன்னுடைய தாத்தா காலத்தில், புதுக்கோட்டை ராஜா எங்களுக்கு கொடுத்த நிலமும் பிற்காலத்தில் பறிபோனது. பரம்பரை நடனக்கலைஞர்கள் என்றாலும் எங்களின் நடனத்திற்கும் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது வேதனையாக தான் இருந்தது” என்று கூறுகிறார் முத்துக்கண்ணம்மாளின் இளைய மகன் ராஜேந்திரன்.
சதிரை கற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லையா? இப்போது உங்களின் அம்மாவை தவிர அந்த 31 நபர்களில் வேறு யாரும் தங்களின் வம்சத்தினருக்கு சதிர் நடனம் கற்றுத்தரவில்லையா என்று கேள்வி எழுப்பினோம். அப்போது, ”வறுமை தான் காரணம். நலிவடைந்த கலைஞர்களாக நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டோம். வாழ வேண்டும் இல்லையா? அதனால் பெருநகரங்களுக்கும், கிடைத்த வேலையை செய்யுவும் பழகிக் கொண்டோம்” என்று கூறினார்.
தொடரும் கோரல்களும், மறுக்கப்படும் உரிமையும் - சதிரின் இன்றைய நிலை என்ன?
நாடுகள் தாண்டி, கண்டங்கள் தாண்டி, எல்லைகள் ஏதும் இன்றி பரதம் பரந்து விரிந்து பலராலும் கொண்டாடப்படுகிறது. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே இசை வேளாளர்கள், சதிர் நடனங்களில் பல்வேறு மாற்றங்களையும், புதுமைகளையும் புகுத்தினார்கள். இந்த நடனம் கற்றுக் கொள்ள தமிழகத்தில் இருந்த மேட்டுக்குடி மக்களிடம் ஆர்வம் அதிகரித்தது. இன்று பலராலும் கொண்டாடப்படும் பரத கலைஞர்களுக்கு இசை வேளாளர் குடும்பத்தில் இருந்து வந்த நட்டுவனார்களும், சதிர் நடனக்கலைஞர்களும் நாட்டியம் கற்றுக் கொடுத்தனர்.
சதிர் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று பரதநாட்டியம் ஊர் மெச்ச போற்றும் கலையாக இருக்கிறது. ஆனால் சதிர் என்றால் தேவதாசி என்றும் தேவரடியார் என்றும் திரிக்கப்பட்ட பொருளில் நிறுத்தப்பட்டு கொச்சைப்படுத்தப்படுகிறது.
ஒருவர் செய்யும் தொழிலை வைத்து அவரின் சாதி இதுவென வகுப்பதும், இன்ன சாதியினருக்கு இந்த பணி என்று ஒதுக்கி அவர்களின் உரிமைகளை மறுப்பதும், அவர்களை சமூக ரீதியாக புறக்கணிப்பதும் மனித குலத்திற்கு இழுக்கான ஒன்று. சாதிய வன்முறை வெறியாட்டங்கள் ஒரு பக்கம் என்றால், ஒடுக்கப்பட்ட சாதியினரின் கலைகளும் உழைப்பும் திருடப்பட்டு இன்று மேல்தட்டு மக்களின் “எலைட்” கலையாக மாறி சபாக்களில் இசைப்பதும், அபிநயம் பிடிப்பதும், சமானிய மக்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீக கலைகள் அவை என கற்பிதம் கற்பிப்பதும் கூட ஒருவகையில் நவீன கால தீண்டாமைகளில் இடம் பெறுகிறது. பரதத்தின் முன்னோடி சதிர் என்றும், பாரம்பரியமாக நடனமாடும் மரபை சேர்ந்தவர்களே பரத நாட்டியத்திற்கான முழுமையான உரிமை கோரல்களையும் பெற முடியும் என்று தீர்க்கமாக வாதிடுகின்றனர் பாரம்பரிய இசை மற்றும் நடன பரம்பரையை சேர்ந்த இசை வேளாளர்கள்.
”முத்துக்கண்ணம்மாள் அம்மாவுக்கு இந்த விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். பெருமிதம் அடைய வைக்கிறது. எங்களின் நீண்ட நெடிய உரிமைப் போராட்டத்திற்கு இந்த விருது உத்வேகம் அளிக்கிறது. நானும் இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் என்றாலும் கூட 2012ம் ஆண்டில் தான் எனக்கு முத்துக்கண்ணாம்மாள் குறித்து நான் தெரிந்து கொண்டேன். தாவேஷ் சோனேஜி எழுதிய அன்ஃபினிஷ்ட் கெஸ்சர்ஸ் (Unfinished Gestures) என்ற புத்தகம் மூலமாகவே அவர் எனக்கு அறிமுகம் ஆனார். பல்வேறு காலங்களில், நிகழ்வில் அதன் பின்னர் நாங்கள் சந்தித்து இருக்கின்றோம். இது சதிர் நடனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்” என்று கூறினார் பரதக்கலைஞரான நிருத்யா. "முத்துக்கண்ணம்மாளுக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க தொடர்ந்து போராடிய நபர்களில் ஒருவர் ஆவணப்பட இயக்குநர் எஸ். சண்முகநாதன். அவரின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தான் முத்துக்கண்ணம்மாள் இன்று பலருக்கும் பரீட்சையமான நபராக மாறி இருக்கிறார். அவருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்" என்றார் அவர்.
”சதிர் தூய்மையற்றது…. தூய்மைப்படுத்துகிறோம் என்று கூறி பரதநாட்டியத்தை ஆடினார்கள் உயர்சாதி இந்து பெண்கள். தற்போது பரதத்தோடு நின்றுவிட வேண்டாம், அதன் மூலமான சதிரையும் நாங்களே ஆடுவோம் என்று அதனையும் எங்களிடம் இருந்து ஆக்கிரமிப்பு செய்ய துவங்கிவிட்டனர். இசை வேளாளர் குடும்பத்தில் தற்போது நடனமாடும் பரதக்கலைஞர்களுக்கு, மேல்தட்டு பரத கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இதனால் தடைபட்டு போவதோடு, எங்கள் சமூகத்தின் அறிவுசார் சொத்தான சதிர் குறித்தும், அதன் வழித்தோன்றலான பரதம் குறித்தும் விவாதிக்கவும், உரிமை கோரவும் கூட வழி இல்லாமல் செய்துவிடுகின்றனர். சதிர் ஆடும் போது, இது தேவதாசிகளின் நடனம் என்று அடையாளப்படுத்தி இக்கலையையும், இந்த கலைஞர்களையும் கொச்சைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை” என்று கூறிய நிருத்யா ”சதிரின் முகவரியாய் எப்போதும் முத்துக்கண்ணாம்மாளே திகழ்வார். இந்த நடனத்திற்கு வேறு எவர் உரிமை கோரினாலும் அது ஏற்புடையதல்ல” என்றும் தெரிவித்தார்.
இந்த தீண்டாமைகளுக்கு மத்தியில், பரம்பரை பரம்பரையாக தன்னை வளர்த்த கலைக்கும், கலையை வளர்த்த கலைஞனுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தால் அது வெறும் பேசுபொருளாகவே நின்றுவிடுகிறது. இந்த கலைக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்க ஏன் இத்தனை காலங்கள் தேவைப்பட்டது என்ற கேள்விக்கு மட்டும் இன்றும் பதில் கிடைக்கவில்லை.
”இன்றும் இந்த கலை வாழ வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். என்னுடைய இறுதி மூச்சு இருக்கும் வரை நான் சதிர் நடனம் ஆடுவேன். சதிர் கற்றுக் கொடுங்கள் என்று யாராவது கேட்டால் மறுக்காமல் நான் அக்கலையை கற்றுக் கொடுப்பேன். என்னுடைய நாட்களுக்கு பின்பும் இக்கலை உயிர்திருக்க வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறெந்த ஆசையும் இல்லை” என்று முத்துக்கண்ணாம்மாள் கூறும் போது இந்த கலைக்கான அங்கீகாரமும் உரிமையும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் அவர் குரலில் இல்லாமல் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.