Coimbatore News : இந்திய அரசு கடந்த மாதம் பத்ம விருதுகளை பெறும் நபர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியம் உட்பட பலரும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அனைவரின் மனதிலும் இடம் பெற்றது தமிழகத்தை சேர்ந்த 105 வயது பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள் பாட்டி தான். அவர் என்ன செய்தார், எதற்காக அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது தேக்கம்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான் ரங்கம்மாள் என்ற விவசாயி. விவசாயிகள் அல்லது இயற்கை விவசாயிகள் என்றால் உடனே ஆண்கள் மட்டுமே ஞாபகத்திற்கு வருகின்ற நிலையில் அனைத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளார் ரங்கம்மாள். ஆரம்ப காலத்தில் இருந்தே யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், மாதர் சங்க தலைவி என்று பல்வேறு முக்கியமான பொறுப்புகளை வகித்து வந்துள்ளார் அவர்.
தன் தங்கை மகன் மற்றும் பேர குழந்தைகள், கொள்ளுப்பேர குழந்தைகள் என்று அனைவரும் காடு மற்றும் தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதை பெறுமையாக குறிப்பிடும் அவர், “இன்று விவசாயம் செய்வதற்கு ஆளில்லை. ஒருவரின் வீட்டில் ஒருவர் அல்லது இருவர் ஆசைப்பட்டால் மட்டுமே விவசாயத்தை மேற்கொள்கின்றனர். இல்லையென்றால் அதுவும் கிடையாது. நூறு நாள் வேலைத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு யாரும் விவசாய கூலியாகவும் கூட நிலத்தை உழவோ அங்கு வேலை செய்யவோ தயாராக இல்லை” என்று வருத்தம் தெரிவிக்கிறார்.
மேலும் படிக்க : நீலகிரிக்கே உரித்தான தாவரங்களை வளர்க்கும் ஆராய்ச்சியாளர் காட்வின் வசந்த்!
ஆரம்பத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்த பிறகு ரசாயனங்கள் ஏதும் இன்றி தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்ய துவங்கினார் பாப்பம்மாள். ஆரம்பத்தில் பலரும் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், ரசாயன உரங்கள் பயன்படுத்தி கிடைத்த மகசூலைக்காட்டிலும் இதில் கூடுதல் மகசூழ் வந்தது. இதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த பகுதியில் சில விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறினார்கள் என்கிறார் ரங்கம்மாள்.
ஒருவர் மட்டும் ரசாயனம் இல்லாத விவசாயத்தை மேற்கொண்டால் போதுமானது அல்ல. அக்கம்பக்கத்தில் இருக்கும் நிலத்துக்காரர்களும் அதனை மேற்கொண்டால் மட்டுமே இனி ரசாயனம் ஏதும் இல்லாத பயிர்களை நாம் உணவிற்கு எடுத்துக் கொள்ள முடியும் என்றார் அவர். இன்றும் கூட காலை நான்கு மணிக்கு எழுந்து தன்னுடைய வாழை தோட்டத்திற்கு சென்று வீடு திரும்புகிறார் ரங்கம்மாள்.
அடுத்த தலைமுறை மக்கள் இது போன்ற விவசாயத்தில் ஈடுபடுவார்களா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் வெளியூர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சிலர் இங்கு வந்து தங்கி, எங்களின் தோட்டத்தில் நாங்கள் பயிரிடும் முறையை பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு செல்வது எங்களுக்கு ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வித நம்பிக்கையை தருகிறது என்று கூறினார் இந்த 105 வயது இளம்பெண்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.