ஸ்டாலின் - எடப்பாடி ரகசியக் கூட்டு: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய கூட்டு வைத்துள்ளார் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய கூட்டு வைத்துள்ளார் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இதனையடுத்து, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக பிளவு கண்டது. அப்போது திமுக-வுடன் பன்னீர்செல்வம் ரகசிய உறவு வைத்திருக்கிறார் என குற்றம் சாட்டப்பட்டது.

அதன் பின்னர், சசிகலா சிறை சென்றதும் கட்சி தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். தொடர்ந்து, பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தான ஆர்கே இடைத்தேர்தலின் போது, அதிமுக கட்சி மற்றும் சின்னம் முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அதிமுக அம்மா அணி – அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என அக்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். அப்போது, எடப்பாடி அணி உருவானது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அம்மா அணி என்றும் செயல்பட்டு வருகிறனர்.

இரு அணிகளாக இருக்கும் அதிமுக-வின் இந்த அணிகளை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பதினரை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை என பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். கருத்து ஒற்றுமை ஏற்படாததால் இந்த இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்று தனது ஆதரவாளர்களை பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். அதன்படி, ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்தித்த பன்னீர்செல்வம், அணிகள் இணைப்பு விவகாரத்தில் கட்சியினரை அமைச்சர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். முதல்வர் பழனிச்சாமியின் அணி ஏமாற்று வேலை புரிகிறது. அதனால் தான் பேச்சுவார்த்தை குழுவை கலைப்படுவதாக அறிவித்தேன். சசிகலா குடும்பத்துடன் உறவை முறித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி ஆணித்தரமாக அறிவிக்க வேண்டும். வேறு யாரும் அதனை கூறக் கூடாது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருடன் உறவை முறித்துக் கொண்டால் மட்டுமே அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

மேலும் பேசிய அவர், திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய கூட்டு வைத்துள்ளார் என குற்றம் சாட்டினார். வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையமே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற விவகாரத்தை ஸ்டாலின் கிளப்பினார். ஆனால், முதல்வர் பழனிச்சாமியின் தலையீட்டுக்கு பின்னர், இந்த விஷயம் சுமூகமானது. முதல்வர் குறித்து பேசாமல் வேறு விஷயத்துக்கு ஸ்டாலின் சென்று விட்டார் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த புகாருக்கு உடனடியாக சுடசுட பதில் அளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக வுடன் தொடர்பு வைத்த புகார் காரணமாக தான் பன்னீர்செல்வம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர், முதல்வர் குறித்து சொல்வதை ஏற்க முடியாது என்றார்.

×Close
×Close