தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்....பன்னீர் அணி முடிவு! இதுதான் காரணமா?

கட்சிக்குள் நிலவும் போட்டியை சமாளித்து, மீண்டும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி, தேர்தலில் போட்டியிடுவதைவிட.......

தினகரனை வெளியேற்றினால் அதிமுக இணைந்துவிடும் என்று கணக்கு போட்ட தொண்டர்களுக்கு இன்று வரை ஏமாற்றமே மிச்சம்.  பன்னீர் செல்வம் அணியினரும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் தற்போது வரை புதுசு புதுசாக காரணங்களைக் கண்டுபிடித்து, ஒருவரையொருவர் குறை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, இணையும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக காட்டவேயில்லை.

இந்நிலையில், விகடன் வெளியிட்டுள்ள செய்தியில், விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக, புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஓ.பி.எஸ். தீவிரமாக களமிறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இரு அணிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே, இரட்டை இலை சின்னத்தைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு தரப்பிலும், அணிகளை இணைக்கும் பணிகளைவிட, இணைக்கவிடாமல் தடுக்கும் பணிகளே அதிகமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில், கட்சிக்குள் நிலவும் இந்தப் போட்டியை சமாளித்து, மீண்டும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி, தேர்தலில் போட்டியிடுவதைவிட, தனித்து நின்று உள்ளாட்சித் தேர்தலில் செல்வாக்கை நிரூபித்து, இரட்டை இலை சின்னத்தைத் திரும்பப் பெறலாம் என பன்னீர் செல்வம் அணி முடிவு செய்திருப்பதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவின் காரணமாகத்தான், வரும் மே 5-ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய பன்னீர் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், வட்டக் கழகம், மாவட்ட, மாநில நிர்வாகிகள் வரை ஓ.பி.எஸ். தரப்பில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். அதேபோன்று, இடைத்தேர்தலில் வாங்கியிருந்த ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்தை கேட்க, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்திருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close