டி.டி.வி.தினகரன் அணியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இணைய இருப்பதாக தகவல்கள் பரவின. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
டி.டி.வி.தினகரன், அதிமுக-வில் இருந்து இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினரால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இரட்டை இலை சின்னத்திற்காக சசிகலா-டி.டி.வி.தினகரன் ஒரு தரப்பாகவும், இபிஎஸ்-ஓபிஎஸ் இன்னொரு தரப்பாகவும் முட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் அதிமுக சீனியர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கியிருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய தருணத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, சசிகலா தரப்புக்காக மீடியாவிடம் பேட்டிகள் கொடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான்! டி.டி.வி.தினகரனுக்கும், இபிஎஸ் தரப்புக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது இரு தரப்பும் சந்தித்து பேச டிடிவி.தினகரனிடம் பரிந்துரை செய்தவரும் பண்ருட்டியாரே!
ஆனால் டிடிவி தினகரன் -இபிஎஸ் இடையே சமரசம் ஆகவில்லை. அதன்பிறகு பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த அரசியல் நடவடிக்கையிலும் இல்லாமல் ஒதுங்கியிருக்கிறார். இபிஎஸ் தரப்பு அழைத்தபோதும் அவர் செல்லவில்லை. டிடிவி தினகரன் அவ்வப்போது அவரது உடல்நிலையை விசாரித்ததுடன், ஆக்டிவ் அரசியலுக்கு வரும்படி அழைப்பும் விடுத்தார்.
ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி, டிடிவி தினகரனுடன் செல்வதையும் தவிஎத்தார். இந்தச் சூழலில் கடந்த சில தினங்களாக டிடிவி தினகரன் தொடர்ந்து பேசி பண்ருட்டி ராமச்சந்திரனை சமரசம் செய்துவிட்டதாகவும், அதிமுக ஆண்டுவிழா கொண்டாட்டத்தையொட்டி அவர் டிடிவி தினகரனை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின.
ஏற்கனவே சசிகலா தரப்பில் கட்சியின் அவைத்தலைவர் பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது. அவர் தற்போது இபிஎஸ் அணியில் இருக்கிறார். சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரன், அவைத்தலைவர் பொறுப்புக்கு பொறுத்தமானவர். ஏற்கனவே தேமுதிக-வில் அவைத்தலைவர் பொறுப்பில் அவர் இருந்தார். டிடிவி அணியிலும் அந்தப் பதவியை ஏற்க அவர் தயாராகிவிட்டதாகவும் செய்திகள் வந்தன.
இது தொடர்பாக பண்ருட்டியார் தரப்பை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘வயது மூப்பு காரணமாக ஆக்டிவ் அரசியலை பண்ருட்டியார் விரும்பவில்லை. அவரது உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. டிடிவி தினகரன் உள்பட பலரும் அவரது உடல்நிலையை விசாரிக்கிறார்கள். எந்த அணிக்கும் வருவதாக யாருக்கும் அவர் உறுதி கொடுக்கவில்லை’ என்கிறார்கள்.
இது குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிடம் பேசியபோது, ‘அரசியலின் போக்கை நன்கு உணர்ந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சசிகலா தரப்பால் பொதுமக்களை சந்திக்கவும் முடியாது, ஓட்டு வாங்கவும் முடியாது என்பதை எங்களைவிட அதிகம் உணர்ந்தவர் அவர். அதேசமயம் உடல்நிலை ஒத்துழைக்காத சூழலில் கோஷ்டி அரசியலையும் அவர் விரும்பவில்லை. அவர் ஒருபோதும் தோற்கிற அணியான டிடிவி அணிக்கு போகவே மாட்டார்’ என்கிறார்கள்.
ஆனால் கரைக்கிற விதமாக கரைத்தால், பண்ருட்டியாரும் கரைவார் என்கிற நம்பிக்கையுடன் டிடிவி தரப்பு இயங்கி வருவதாக கூறப்படுகிறது. பார்க்கலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.