மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் கடந்த கால நிலவரம் குறித்து இந்தத் தொடர்க் கட்டுரையில் பார்ப்போம்.
தமிழகத்தின் தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள மத்திய சென்னை தொகுதி தி.மு.க.,வின் கோட்டையாக இருந்து வருகிறது. இதுவரை நடந்த 12 தேர்தல்களில் 8ல் தி.மு.க.,வே வென்றுள்ளது. தமிழகத்தின் மிகச் சிறிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இப்போதுத் தெரிந்துக் கொள்வோம்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் மத்திய சென்னை 4 ஆவது தொகுதியாகும். மத்திய சென்னை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் மத்திய சென்னை தொகுதியில் இடம் பெற்றிருந்த பூங்கா நகர், புரசைவாக்கம் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு, வில்லிவாக்கம் மற்றும் துறைமுகம் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, அண்ணா நகர், ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
1977 தேர்தலில் தான் மத்திய சென்னைத் தொகுதி உருவானது. முதல் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது தேர்தல் முதல் தி.மு.க ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1980 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வெற்றி பெற்றார். 1984 தேர்தலிலும் தி.மு.க வேட்பாளர் கலாநிதியே வெற்றி பெற்றார்.
1989 தேர்தலில் காங்கிரஸ் தொகுதியை மீண்டும் கைப்பற்றியது. 1989 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அன்பரசு வெற்றி பெற்றார். 1991 தேர்தலிலும் காங்கிரஸின் அன்பரசு வெற்றி பெற்றார்.
1996 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசமானது. மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வெற்றி பெற்றார். முரசொலி மாறன் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்தார். முரசொலி மாறன் 1996, 1998, 1999 ஆகிய 3 தேர்தல்களிலும் வென்றார்.
2004 தேர்தலில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் முதன்முறையாக களமிறங்கினார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆன தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ஆனார். மீண்டும் 2009 தேர்தலிலும் தயாநிதி மாறன் வெற்றிப் பெற்று மத்திய அமைச்சர் ஆனார்.
2014 தேர்தலிலும் மீண்டும் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் களமிறங்கினார். ஆனால் இந்த முறை தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலை வீசியது. அ.தி.மு.க 39ல் 37 தொகுதிகளை கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் தான் அ.தி.மு.க முதன்முறையாக மத்திய சென்னை தொகுதியில் வென்றது.
2019 தேர்தல்
2019 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசம் வந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் மீண்டும் தயாநிதி மாறன் களமிறங்கினார். அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. பா.ம.க சார்பில் சாம் பவுல் களமிறங்கினார். ஆனால், தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தநிலையில், சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வென்றார். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 39%. தயாநிதி மாறன் 4,48,911 வாக்குகளையும், சாம்பவுல் 1,47,391 வாக்குகளையும் பெற்றனர்.
மக்கள் நீதி மய்யம் 11.74% வாக்குகளை பெற்றது. ம.நீ.ம வேட்பாளர் கமீலா நாசர் 92,249 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி 30,886 வாக்குகளையும், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 23,741 வாக்குகளையும் பெற்றன.
தொகுதியை தக்கவைக்குமா தி.மு.க?
தி.மு.க கூட்டணியில் மீண்டும் திமுகவே களமிறங்கும். மத்திய சென்னை தொகுதி சுமார் 30 ஆண்டுகளாக மாறன் குடும்பத்தின் கோட்டையாகவே இருந்து வருகிறது, எனவே இந்தத் தேர்தலிலும் மீண்டும் தயாநிதி மாறனே களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி மீண்டும் பாமகவுக்கு ஒதுக்கப்படுமா என்பது கேள்விக்குறி. இந்த முறை அ.தி.மு.க நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளது. பா.ஜ.க சார்பில் முக்கிய இளம் தலைவரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.