மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் கடந்த கால நிலவரம் குறித்து இந்தத் தொடர்க் கட்டுரையில் பார்ப்போம்.
மேற்கு மண்டலத்தில் அதியமான் கோட்டையான தருமபுரி தொகுதியில் பெரும்பாலும் மாநிலக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. பா.ம.க கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தருமபுரி தொகுதியின் தேர்தல் வரலாற்றை இப்போதுத் தெரிந்துக் கொள்வோம்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் தருமபுரி 10 ஆவது தொகுதியாகும். தருமபுரி தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் அரூர், பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் தருமபுரி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இதில் மேட்டூர் தொகுதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது.
தருமபுரி மக்களவைத் தொகுதி 1977ல் தான் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அடுத்து 1980ல் நடந்த தேர்தலில் தொகுதியை தி.மு.க கைப்பற்றியது.
பின்னர் 1984 தேர்தலில் தொகுதி அ.தி.மு.க வசமானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை வெற்றி பெற்றார். அடுத்து 1989ல் நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க வென்றது. அதன்பின்னர் இதுவரை அ.தி.மு.க இந்த தொகுதியில் வெற்றி பெற்றதில்லை.
1991ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தொகுதியை கைப்பற்றியது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி தங்கபாலு வெற்றி பெற்று எம்.பி.,யானார். 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதன்பின்னர் நடந்த 3 தேர்தல்களையும் பாட்டாளி மக்கள் கட்சி வென்றது. 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பா.ம.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
29 ஆண்டுகளுக்குப் பிறகு 2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க தொகுதியை மீண்டும் கைப்பற்றியது.
2014 தேர்தலில் மீண்டும் தொகுதி பா.ம.க வசமானது. இந்த முறை அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்று எம்.பி.,யானார். தமிழகத்தின் 39 தொகுதிகளில் 37 இடங்களில் அ.தி.மு.க வெற்றி தேர்தலில், தருமபுரி தொகுதியில் பா.ம.க வெற்றி பெற்றது.
2019 தேர்தல்
2029 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசம் வந்தது. இந்தத் தேர்தலில் பா.ம.க சார்பில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் களமிறங்கிய நிலையில், போட்டி கடுமையானது. இருப்பினும் தி.மு.க வேட்பாளர் டாக்டர் செந்தில் குமார் 6%க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செந்தில் குமார் 5,74,988 வாக்குகளையும், அன்புமணி ராமதாஸ் 5,04,235 வாக்குகளையும் பெற்றனர்.
அ.ம.மு.க 53,655 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 19,674 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 15,614 வாக்குகளையும் பெற்றன. நோட்டாவுக்கு 1.09% (13,379) வாக்குகள் விழுந்தன.
அதியமான் கோட்டை யாருக்கு?
தி.மு.க கூட்டணியில் இந்த முறையும் தி.மு.க.,வே நேரடியாக களமிறங்கும் எனக் கூறப்படுகிறது. தற்போதைய எம்.பி செந்தில் குமார் மீண்டும் களமிறக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அ.தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க.,வை கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையாததால் யார் களமிறங்குவார் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் பா.ம.க சார்பில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.