மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் கடந்த கால நிலவரம் குறித்து இந்தத் தொடர்க் கட்டுரையில் பார்ப்போம்.
பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த சிவகங்கை தொகுதியின் தேர்தல் வரலாற்றை இப்போதுத் தெரிந்துக் கொள்வோம். தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் சிவகங்கை 31 ஆவது தொகுதியாகும். 1967 முதல் மக்களவை தொகுதியாக இருந்து வரும் இந்த தொகுதியில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, முன்னாள் நிதியமைச்சரும், மண்ணின் மைந்தருமான ப.சிதம்பரம் 7 முறை வென்றுள்ள நிலையில், கடைசியாக நடந்த தேர்தலில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றதன் மூலம் சிதம்பரம் குடும்பத்தின் கோட்டையாக சிவகங்கை தொகுதி பார்க்கப்படுகிறது. இதில் ப.சிதம்பரம் இரண்டு முறை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை தொகுதியில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 தொகுதிகளும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவை. அருகிலுள்ள உள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதிகள் இந்தத் தொகுதியுடன் மறுசீரமைப்புக்குப் பின் இணைக்கப்பட்டுள்ளன.
1967இல் தொகுதி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.,வின் முக்கிய தலைவர் தா.கிருட்டினன் இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். 1977 தேர்தலில் அ.தி.மு.க வென்றது. பின்னர் 1980 முதல் காங்கிரஸின் ராஜ்ஜியம் தொடங்கியது. 1980 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுவாமிநாதன் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 1984 முதல் 1998 வரை நடந்த 5 தேர்தல்களிலும் ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். இதில் கடைசி இரண்டு தேர்தல்களில் ப.சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
பின்னர் 1999 தேர்தலில் தொகுதி மீண்டும் காங்கிரஸ் பக்கம் திரும்பியது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் வென்றார். பின்னர் மீண்டும் ப.சிதம்பரம் வந்தார். 2004 மற்றும் 2009 தேர்தல்களில் ப.சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார்.
2014 தேர்தலில் இந்தியா முழுவதும் மாற்றத்தின் அலை வீசியது போல், தமிழகத்திலும் அந்த அலை வீசியது. ஆனால், அகில இந்திய அளவில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்து நின்றன, மேலும் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலை வீசியதால், அ.தி.மு.க 37 தொகுதிகளை வென்றது. சிவகங்கையிலும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றார். தி.மு.க இரண்டாம் இடத்தையும், பா.ஜ.க மூன்றாம் இடத்தையும், காங்கிரஸ் நான்காம் இடத்தையும் பிடித்தன. இந்தத் தேர்தலில் முதல்முறையாக கார்த்தி சிதம்பரம் தேர்தல் களத்தில் களமிறங்கினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் நான்காம் இடத்தை பிடித்த நிலையில், அடுத்த தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எம்.பி ஆனார்.
2019ல் நடந்த 17 ஆவது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தொகுதியை கைப்பற்றியது, கார்த்தி சிதம்பரம் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்டு பெரிய வெற்றி பெற்றார். காங்கிரஸ் – தி.மு.க மீண்டும் இணைந்த நிலையில், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் 5,66,104 வாக்குகளைப் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா 2,33,860 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இருவருக்கும் இடையே வாக்கு சதவீத வித்தியாசம் கிட்டத்தட்ட 50%. இந்தத் தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அகில இந்திய அளவில் பா.ஜ.க வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
இருவரையும் தவிர டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட தேர்போகி பாண்டி 1,22,534 வாக்குகளைப் பெற்றார். இவை அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு சென்றிருக்க வேண்டிய வாக்குகளாக கூறப்படுகிறது. அடுத்ததாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சக்தி பிரியா 72,240 வாக்குகளைப் பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட கவிஞர் சினேகன் 22,931 வாக்குகளை மட்டுமே பெற்றார். சுயேட்சை வேட்பாளர் 11,167 வாக்குகளை பெற்றார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அரசியல் கட்சி, கூட்டணி, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த முறையும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்திக்கும் எனக் கூறப்படும் நிலையில், தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என மாவட்ட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை மீறி தொகுதியைப் பெற்று, கார்த்தி சிதம்பரம் மீண்டும் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மறுபுறம், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தனித்து களமிறங்கும் என கூறப்படும் நிலையில், அ.தி.மு.க வேட்பாளாராக யார் களமிறங்குவார் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம், பா.ஜ.க மீண்டும் எச்.ராஜாவை களமிறக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.