மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் கடந்த கால நிலவரம் குறித்து இந்தத் தொடர்க் கட்டுரையில் பார்ப்போம்.
சென்னையின் புறநகர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை தொகுதியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் போட்டியிட்ட தென்சென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இப்போதுத் தெரிந்துக் கொள்வோம்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் தென்சென்னை 3 ஆவது தொகுதியாகும். தென் சென்னை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் தென் சென்னை தொகுதியில் இடம் பெற்றிருந்த திருவல்லிக்கேணி, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு, விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது தென் சென்னை மக்களவைத் தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சோழிங்க நல்லூர் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தது.
சுதந்திர இந்தியாவின் இரண்டாவது தேர்தல் முதல் மக்களவை தொகுதியாக இருந்து வரும் தென் சென்னை தொகுதியில் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். 1957ல் நடந்த முதல் தேர்தலில், இந்தியாவின் நிதியமைச்சராக பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி, காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
1962 முதல் 1977 வரை தொகுதியை தி.மு.க கைப்பற்றியது. 1962 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட நாஞ்சில் மனோகரன் வெற்றி பெற்றார். அடுத்து 1967ல் நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அண்ணா வெற்றி பெற்றார். பின்னர் 1967ல் நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் முரசொலி மாறன் வெற்றி பெற்றார். 1971 தேர்தலிலும் தி.மு.க சார்பில் போட்டியிட்ட முரசொலி மாறன் வெற்றி பெற்றார்.
பின்னர் 1977 தேர்தலில் தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசமானது. 1977, 1980, 1984, 1989 ஆகிய நான்கு தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1977 தேர்தலில், பின்னர் இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவரான வெங்கட்ராமன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, முரசொலி மாறனை தோற்கடித்தார். 1980 தேர்தலில் வெங்கட்ராமன் இந்திரா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984 மற்றும் 1989 ஆகிய இரண்டு தேர்தல்களில் பிரபல நடிகை வைஜெயந்திமாலா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யானார்.
1991 தேர்தலில் முதல்முறையாக தொகுதியை அ.தி.மு.க கைப்பற்றியது. தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் ஸ்ரீதரன் வெற்றி பெற்று எம்.பி.,யானார்.
இந்தத் தேர்தலில் தோற்றாலும், அடுத்த நான்கு தேர்தல்களிலும் டி.ஆர் பாலு வெற்றி பெற்றார். 1996, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
2009 தேர்தலில் தொகுதி மீண்டும் அ.தி.மு.க வசமானது. தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 2014 தேர்தலிலும் ஜெயலலிதா அலையால் தொகுதியை அ.தி.மு.க தக்கவைத்துக் கொண்டது. தி.மு.க சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் வெற்றி பெற்றார்.
2019 தேர்தல்
2019 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசம் வந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் களமிறங்கினார். அ.தி.மு.க சார்பில் மீண்டும் ஜெயவர்த்தன் போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தநிலையில், சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயவர்த்தனை தமிழச்சி தங்கபாண்டியன் தோற்கடித்தார். தமிழச்சி தங்கபாண்டியன் 5,64,872 வாக்குகளையும், ஜெயவர்த்தன் 3,02,649 வாக்குகளையும் பெற்றனர்.
மக்கள் நீதி மய்யம் 12% வாக்குகளைப் பெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ரங்கராஜன் 1,35,465 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி 50,222 வாக்குகளையும், அ.ம.மு.க 29,522 வாக்குகளையும் பெற்றன. நோட்டாவுக்கு 16,891 வாக்குகள் கிடைத்தன.
தொகுதியை தக்கவைக்குமா தி.மு.க?
தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளில் வேட்பாளர்களில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. தி.மு.க கூட்டணியில் தற்போதைய எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. அ.தி.மு.க சார்பில் ஜெயவர்த்தன் மீண்டும் களமிறங்கலாம். இந்தத் தேர்தலில் தொகுதியில் பா.ஜ.க கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.