மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் கடந்த கால நிலவரம் குறித்து இந்தத் தொடர்க் கட்டுரையில் பார்ப்போம்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. டெல்டா பகுதியின் முக்கியத் தொகுதியான தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இப்போதுத் தெரிந்துக் கொள்வோம்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் தஞ்சாவூர் 30 ஆவது தொகுதியாகும். தஞ்சாவூர் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் தஞ்சாவூர் தொகுதியில் இடம் பெற்றிருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திருவையாறு, மன்னார்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தது.
சோழ வம்சம் ஆண்ட தஞ்சாவூர், இந்தியாவின் முதல் தேர்தல் முதல் மக்களவை தொகுதியாக இருந்து வருகிறது. 1952ல் நடந்த முதல் தேர்தலில், பின்னர் இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்த வெங்கட்ராமன், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். 1957 தேர்தலிலும் வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். 1962 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைரவத் தேவர் வெற்றி பெற்றார்.
அடுத்து 1967ல் நடந்த தேர்தலில் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது. 1971 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரம் வெற்றி பெற்றார். இதே சோமசுந்தரம் அடுத்து 1977 தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
பின்னர் 1979ல் நடந்த இடைத்தேர்தலில் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றியது. 1979, 1980, 1984, 1989 ஆகிய நான்கு தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிங்காரவடிவேல் வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதந்திர போராட்ட வீரர் கிருஷ்ணசாமி துளசி அய்யா வாண்டையார் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுதி மீண்டும் தி.மு.க வசமானது. 1996 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ் பழநிமாணிக்கம் வெற்றி பெற்று எம்.பி.,யானார். பழநிமாணிக்கம் 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய 5 தேர்தல்களிலும் தி.மு.க சார்பில் போட்டியிட்டு தஞ்சாவூர் எம்.பி ஆக தேர்வானார்.
2014 தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலை வீசி, 39 தொகுதிகளில் அ.தி.மு.க 37 தொகுதிகளை வென்ற 2014 தேர்தலில் தான் 47 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் பழநிமாணிக்கத்திற்கு பதிலாக டி.ஆர் பாலு போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமன் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2019 தேர்தல்
2019 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசம் வந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க மீண்டும் பழநிமாணிக்கத்தை களமிறக்கியது. அ.தி.மு.க கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. பழநிமாணிக்கம் த.மா.கா வேட்பாளர் நடராஜனை விட 35% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பழநிமாணிக்கம் 5,88,978 வாக்குகளையும், நடராஜன் 2,20,849 வாக்குகளையும் பெற்றனர்.
தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் அ.ம.மு.க 1,02,871 வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் கட்சி 57,924 வாக்குகளை பெற்றது. மக்கள் நீதி மய்யத்தை விட (23,477) சுயேட்சையாக போட்டியிட்ட செல்வராஜ் (28,274) அதிக வாக்குகளைப் பெற்றார்.
நெற்களஞ்சியத்தில் வெல்லப்போவது யார்?
தி.மு.க கூட்டணியில் இந்த முறையும் தி.மு.க.,வே நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளது. தற்போதைய எம்.பி எஸ்.எஸ் பழநிமாணிக்கம் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. தஞ்சாவூர் தொகுதி பழநிமாணிக்கத்தின் கோட்டையாக கருதப்படும் நிலையில், அவரே மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை அ.தி.மு.க.,வே நேரடியாக களமிறங்கும் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி த.மா.கா.,வுக்கு ஒதுக்கப்படலாம். மறுபுறம் தனித்து போட்டியிடும் நிலையில், அ.ம.மு.க கணிசமாக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.