மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் கடந்த கால நிலவரம் குறித்து இந்தத் தொடர்க் கட்டுரையில் பார்ப்போம்.
தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை மாறி மாறி வென்றுள்ள மலைக்கோட்டை தொகுதியான திருச்சி எந்தக் கட்சிக்கும் நீண்டகாலமாக கோட்டையாக இருந்ததில்லை. இப்படியான திருச்சி தொகுதியின் தேர்தல் வரலாற்றை இப்போதுத் தெரிந்துக் கொள்வோம்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் திருச்சி 24 ஆவது தொகுதியாகும். திருச்சி தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முசிறி, லால்குடி தொகுதிகள் நீக்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 2 தொகுதிகள் சேர்க்கப்பட்டன. தற்போது திருச்சி தொகுதியில் திருவரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் தொட்டு மக்களவை தொகுதியாக இருந்து வரும் திருச்சி பல்வேறு கட்சிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளது. அதிலும் 1951ல் நடந்த முதல் தேர்தலில் வென்றவர் சுயேட்சை வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவரான எட்வர்ட் பவுல் மதுரம் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் 1957ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 1962 முதல் 1977 வரை திருச்சி கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக மாறியது. 3 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 1967 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன.
பின்னர் 1980 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. திருச்சியில் தி.மு.க வெற்றி பெற்ற ஒரே தேர்தலும் இதுவரை இதுதான். பெரும்பாலும் தி.மு.க இந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடுவதில்லை. கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்படுகிறது. மறுபுறம் அ.தி.மு.க இந்த தொகுதியில் நேரடியாக பலமுறை களமிறங்கியுள்ளது.
பின்னர் 1984 முதல் 1996 வரை திருச்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அடைக்கலராஜ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். இதில் மூன்று முறை காங்கிரஸ் சார்பிலும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் அடைக்கலராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்த இரண்டு தேர்தல்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. பா.ஜ.க.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ரங்கராஜன் குமாரமங்கலம் 1998 மற்றும் 1999களில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றார். பின்னர் ரங்கராஜன் குமாரமங்கலம் 2000 ஆம் ஆண்டில் இறக்கவே, 2001ல் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தலித் எழில்மலை வெற்றி பெற்றார்.
2004 தேர்தலில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்ட எல்.கணேசன் வெற்றி வாகை சூடினார். பின்னர் 2009 மற்றும் 2014 தேர்தல்களில் மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அக்கட்சியின் மூத்த தலைவர் ப.குமார் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 2009 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமானையும், 2014 தேர்தலில் தி.மு.க.,வின் அன்பழகனையும் ப.குமார் தோற்கடித்தார்.
2019 தேர்தல்
2019 தேர்தலில் தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசமானது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடவில்லை. கூட்டணி கட்சியான தே.மு.தி.க போட்டியிட்டது. மறுபுறம் அ.ம.மு.க சார்பில் முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான் களமிறங்கி கணிசமான வாக்குகளைப் பெற்றார்.
இந்தத் தேர்தலில் திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன் 1,61,999 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் கிட்டத்தட்ட 45% வாக்குகள் வித்தியாசத்துடன் திருநாவுக்கரசர் இமாலய வெற்றியை பெற்றார். சாருபாலா தொண்டைமான் 1,00,818 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி 65,286 வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் 42,134 வாக்குகளையும் பெற்றன.
மலைக்கோட்டை யாருக்கு?
2024 தேர்தலில் திருச்சி தொகுதியை கைப்பற்ற தி.மு.க கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. தொகுதி மீண்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்படுமா? அப்படி ஒதுக்கப்பட்டாலும் திருநாவுக்கரசருக்கே சீட் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரான திருநாவுக்கரசருக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸில் எதிர்ப்புகள் இருந்து வருகிறது.
அதேநேரம் தொகுதியை பெற்று துரை வைகோவை களமிறக்க ம.தி.மு.க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. மறுபுறம் தி.மு.க மூத்த தலைவரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திருச்சியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. எனவே தி.மு.க கூட்டணிக்குள்ளே திருச்சி தொகுதி யாருக்கு என்ற சிக்கல் இருந்து வருகிறது.
மறுபுறம் அ.தி.மு.க இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், ஒருவேளை அ.தி.மு.க போட்டியிட்டால், மீண்டும் முன்னாள் எம்.பி.,யும் மாவட்டச் செயலாளருமான ப.குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் பா.ஜ.க.,வும் இன்னும் கூட்டணியை முடிவு செய்யாததால், பா.ஜ.க நேரடியாக களமிறங்குமா அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.