வி.கே.சசிகலாவுக்கு ஒரு அளவுகோல், பேரறிவாளனுக்கு இன்னொன்று, நளினிக்கு வேறொன்று! பரோல் வழங்குவதில் எத்தனை முரண்பாடுகள்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. இவரது கணவர் முருகனுக்கும் அதே வழக்கில் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. நளினி, முருகன் ஆகிய இருவருக்கே இடைவிடாத சட்டப் போராட்டம் காரணமாக ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தற்போது நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும் உள்ளனர். இவர்களை நேற்று இவர்களின் வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்தார். பின்னர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
நளினி கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தனது மகள் திருமணத்திற்கு அவர் 6 மாதம் பரோல் கேட்டு மனு அளித்திருந்தார். அது தொடர்பாக விசாரித்த சிறை கைதிகளுக்கான நன்னடத்தை அதிகாரிகள், ‘நளினிக்கு சென்னை மற்றும் வேலூரில் சொந்தமான வீடுகள் இல்லை. எனவே அவருக்கு பரோல் வழங்கக் கூடாது’ என சிறை நிர்வாகத்திற்கு கடிதம் அளித்துள்ளனர்.
சொந்த வீடு இல்லை என்பதற்காக பரோல் மறுப்பது தவறானது. இதுதொடர்பாக முதல்வர், சட்டத்துறை அமைச்சரை சந்தித்து நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என மனு அளிக்க உள்ளோம். முருகனும் தனது மகள் திருமணத்திற்காக 1 மாதம் பரோல் கேட்டு மனு அளிக்க உள்ளார். இவ்வாறு புகழேந்தி கூறினார்.
பரோல் வழங்குவதில் சிறைத்துறை கடைபிடிக்கும் குழப்பங்கள் ஆச்சர்யம்தான். அரசியல் பிரமுகர்களையோ, விசிட்டர்களையோ சந்திக்க ராஜீவ் கொலை வழக்கில் பரோலில் வந்த மற்றொரு கைதியான பேரறிவாளனுக்கு தடையில்லை. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலாவுக்கு பரோல் நிபந்தனையாக விசிட்டர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டது.
சசிகலாவை பரோலில் விடுவிக்கும்போது, சொந்த வீடு இருக்கிறதா? என்று கேட்கவில்லை. தனது உறவினரும் சக சிறைவாசியுமான இளவரசியின் மகள் இல்லத்தில்தான் பரோல் காலத்தில் சசிகலா தங்கியிருக்கிறார். தி.நகரில் உள்ள அந்த இல்லத்தையே தனது பரோல் விண்ணப்பத்தில் சசிகலா எழுதியும் கொடுத்தார்.
ஆனால் நளினிக்கு ஏன் ‘சொந்த வீடு’ என்கிற நிபந்தனை விதிக்கப்படுகிறது? ஆளுக்கொரு சட்டமா?