முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 49 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 7 பேரில் மூவருக்கு மரண தண்டனையும், மற்ற நால்வருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ராஜீவ் , ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை கடந்த 2014-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பின்னர், இவர்களை விடுதலை செய்யக் கோரி பல போராட்டங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. அந்த போராட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், அவர்களது விடுதலையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரி பேரறிவாளன் விண்ணப்பித்திருந்தார். அதனையேற்று, 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் சிறைச்சாலைக்கு தமிழக அரசு அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். 26 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 25-ம் தேதி தான் பரோல் மூலம் வெளியுலகத்தை பேரறிவாளன் பார்த்தார். தன்னுடையே வீட்டில் தான் பேரறிவாளன் தங்கியிருக்க வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியாழிக்கக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பேரறிவாளனின் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். பேரறிவாளன் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். பரோல் நீட்டிப்பு குடும்பதினருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உதவியாக இருக்கும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
பேரறிவாளனின் பரோல் முடிவடையும் இந்த நிலையில், பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப் 23-ம் தேதி மாலையில் வெளியாகியுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திடம் பேரறிவாளனின் பரோல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது, விரைவில் அவர் நல்ல முடிவை அறிவிப்பார் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியது போலவே அறிவிப்பு வெளியானது. இந்த நடவடிக்கைக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி கூறியிருக்கிறார்.