பேரறிவாளனின் பரோல் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர், தனக்கு பரோல் கோரி சில மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்திருந்தார். தனக்கு 30 நாள்கள் பரோல் வழங்கும்படி பேரறிவாளன் விடுத்த கோரிக்கையைச் சிறைத்துறை நிராகரித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசின் உள்துறைச் செயலாளருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அனுப்பிய மேல்முறையீட்டு மனு, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. பேரறிவாளன் பரோல் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேரறிவாளன் பரோல் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, "பேரறிவாளனின் பரோல் விடுமுறை கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கும்" என்றார்.
அதேபோல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து தலைமை வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.