தினகரன் ஒதுங்கியிந்தால் நல்லது; எச்சரிக்கும் எடப்பாடி 'தமிழக அமைச்சர்கள்' அணி!

சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை நடத்தினர். செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். பின், அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில் சந்தித்து பேசினர்.

இதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கூட்டாக மற்ற அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, பேசிய ஜெயக்குமார், “வரும் 14-ஆம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இதுகுறித்து அமைச்சர்களாகிய நாங்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அம்மாவின் கனவு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து முதல்வரிடம் அறிவுரைகள் பெற்றோம்.

முன்னதாக, ஏப்ரல் 17-ஆம் தேதி ஏற்பட்ட ஒருமித்த உடன்பாட்டின் அடைப்படையில், தினகரன் சார்பினர் கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டனர். இதையடுத்து, அம்மாவின் திட்டங்கள் செயல்படுத்தி, மக்களிடையே நாங்கள் நல்ல பெயர் எடுத்து வருகிறோம்.

இந்நிலையில், டிடிவி தினகரன் மீண்டும் கட்சிப் பணி ஆற்றப்போகிறேன் என்கிறார். ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒருமித்த உடன்பாட்டை அடுத்து, ‘நான் கட்சி பணியில் ஈடுபட மாட்டேன்’ என்று சொன்னார். அவர் அந்த முடிவிலேயே இருக்க வேண்டும்.

இதனால், ஒட்டுமொத்தமாக இன்று கழக அமைச்சர்கள் எடுத்த முடிவு என்னவெனில், ஏப்ரல் 17 என்று என்ன முடிவு எடுத்தோமோ அதே நிலையில் தான் நாங்கள் இன்னமும் உள்ளோம். அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். அணு அளவும் அவர்களது தலையீடு இல்லாமல் நாங்கள் ஆட்சி நடத்தி வருகிறோம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். நாங்கள் யாரும் தினகரனை சந்திக்க மாட்டோம்.

எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அம்மாவின் ஆட்சியை 5 ஆண்டு காலம் தொடர வைக்க வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு” என்றார்.

இதையடுத்து பேசிய பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், “தினகரனை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு அருகதையே இல்லை. தினகரனை நாங்கள் சந்திக்க கூடாது என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு தகுதியே இல்லை. முதலில், அவரை சொந்த தொகுதிக்கு சென்று நல்லது செய்ய சொல்லுங்கள். எங்களை கட்டுப்படுத்த நிலையில், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்தார்.

இந்தச் சூழிநிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் தற்போது சந்தித்து பேசி வருகிறார்.

×Close
×Close