நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு வரும்: அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நம்பிக்கை

தமிழ்நாட்டில் ஒரே ஒரு பெண் இல்லை என்பதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

13-வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக, தமிழக அரசின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால், 15-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிற்சங்கள், 14-ம் தேதியே போராட்டத்தில் குதித்தன. போக்குவரத்து தொழிளார்கள் அரசு பேருந்துகளில் பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்தினர்.

இதனால் பெரும்பாலான பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், அலுவலகத்திற்கு பேருந்துகளில் செல்லும் மக்கள் பேருந்துக்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.

இதனிடையே சென்னை வடபழனி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளிடம் கேட்டபோது:

நான் இங்கு முக்கால் மணி நேரமாக பேருந்துக்கு காத்திருக்கிறேன். மதிய வேளை என்பதால் வெயிலுக்கு ஒதுங்க கூட இங்கு இடம் இல்லை. பேருந்துக்காக காத்திருப்பது ஓருபுறம் இருக்க, இந்த வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் மிகுந்த சிரமமாக உள்ளது. மினி பஸ், தனியார் பேருந்துகள் என இயக்கப்பட்ட போதிலும், அவை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்கின்றன.

ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கேட்கின்றனர். வழக்கமாக ரூ.6- முதல் ரூ.10 வரை செலவு செய்து செல்லும் இடங்களுக்கு கூட தற்போது ரூ,20 முதல் ரூ.40 ரூபாய் செலவாகிறது. அவ்வளவு செலவில் பயணம் செய்த போதிலும் எங்களால் குறிப்பிட்ட நேரத்தில், நாங்கள் செல்ல நினைக்கும் பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை என்று வேதனை தெரிவித்தனர். இதனால், போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டபோது: தமிழ்நாட்டில் ஒரே ஒரு பெண் இல்லை என்பதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் இது போன்ற பிரச்சனை ஏற்படவில்லை. அவர் தற்போது இருந்திருந்தால், தமிழகத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கப்படப்பட்டிருக்கும். பேருந்து நிறுத்தத்தில் வெகு நேரமாக பேருந்துக்காக காத்திருக்கும் பெரும்பாலான பயணிகள் புலம்பிக்கொண்டு தான் நிற்கின்றனர் என்று கூறினார்.

கட்டண கொள்ளை

இதனிடையே, சென்னை எழும்பூரில் தொழிற்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் தொமுச தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசும்போது, இரண்டாவது நாளாக போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. எங்கள் கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். முதல்வர் இந்த பிரச்சனையில் தலையீட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். அனுபவமில்லாத ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்குகின்றன. இதனால் விபத்து தான் ஏற்படும். பணிமனைகளில் தொழில்நுட்ப பணியாளர்களே உள்ளனர். போக்குவரத்து கழகத்தை தனியார் மையமாக்கல். முயற்சி எடுபடாது. அதை செயல்படுத்த முடியாது, மக்களும் ஏற்க மாட்டார்கள். தனியார் பேருந்துகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.  

நாளை பேச்சுவார்த்தை

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பேசிய போது, ‘நாளை காலை 11 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் யாசிம் பேகம் தலைமையில் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
முதல்வரிடத்தில் இன்றைய நிலவரம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாளை பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்படும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

×Close
×Close