ஓபிஎஸ்-டிடிவி தரப்பு இடையிலான இழுபறியைத் தொடர்ந்து, பசும்பொன் தேவர் தங்க கவசத்தை மதுரை ஆட்சியரிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது!
அதிமுக அணிகளின் மோதல், ஒவ்வொரு பிரச்னையிலும் தலைதூக்கி வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவும், இந்த அணிகளின் மோதலுக்கு தப்பவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில்தான் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேவரின் ஜெயந்தி தினமான அக்டோபர் 30-ம் தேதி முக்குலத்தோர் சமுதாய மக்கள் அங்கு பெருமளவில் திரள்வது வழக்கம். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 28, 29, 30 ஆகிய தினங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. ஜெயந்தி விழாவின் போது அங்குள்ள தேவர் சிலைக்கு அணிவிக்க 13 கிலோ தங்கக் கவசம் ஒன்றை கடந்த 2014-ம் ஆண்டு ஜெயந்தி விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அதிமுக பொறுப்பில், மதுரை பாங்க் ஆப் இந்தியா கிளையில் அந்த கவசம் வைக்கப்பட்டிருக்கிறது. திருவிழாவையொட்டி அதிமுக பொருளாளர், தேவர் நினைவாலய பொறுப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து சென்று அந்த கவசத்தை பெற்று விழாக் குழுவினரிடம் ஒப்படைக்க ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்தார். அதன்படியே கடந்த 3 ஆண்டுகளாக ஜெயந்தி விழாவின்போது அந்த தங்க கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழா நெருங்கிவிட்ட சூழலில் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. வழக்கம்போல அதிமுக பொருளாளர் என்ற முறையில் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அந்த தங்க கவசத்தை கேட்டு வங்கிக் கிளையை அணுகியிருக்கிறார்கள். ஆனால் வங்கிக் கிளை சார்பில், ‘தற்போது எது உண்மையான அதிமுக என்கிற விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழலில் ஒரு அணியினரிடம் நாங்கள் எப்படி தங்க கவசத்தை தர முடியும்?’ என கேள்வி எழுப்பினர்.
சசிகலா தரப்பில் டிடிவி.தினகரன் வங்கி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘தேவர் நினைவாலய நிர்வாகிகளும், பசும்பொன் தேவரின் வாரிசுகளும் அந்த கவசத்தை பெற்று பயன்படுத்துவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என கூறப்பட்டிருந்தது. ஆனால் இபிஎஸ்-ஓபிஎஸ் அணி சார்பில் ஓபிஎஸ் கடந்த சில நாட்களாகவே மதுரையில் முகாமிட்டு எப்படியாவது அந்த கவசத்தை தனது சார்பில் பெற்று விழாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தார்.
இரு தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நாங்கள்தான் உண்மையான அதிமுக. பசும்பொன் தேவர் தங்க கவசத்தை நிச்சயம் எடுத்துச் செல்வோம்’ என கூறினார். ஆனால் ஓபிஎஸ் தரப்பில் பல சுற்றுப் பேச்சுகள் நடத்தியும் வங்கி நிர்வாகத்தினர் தங்க கவசத்தை ஓபிஎஸ்-ஸிடம் வழங்க ஒப்புக் கொள்ளவில்லை.
பரபரப்பான இந்தச் சூழலில் இன்று தங்க கவசத்தை பெற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகவே மதுரை மேலூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளைக்கு வந்தார். இது தெரிந்ததும் டிடிவி தினகரன் அணியினர் அங்கு ஏராளமானோர் திரண்டனர். அவர்கள், ‘தங்க கவசத்தை பொதுவான ஆட்கள் எடுத்துச் செல்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஓபிஎஸ்.ஸிடம் வழங்க அனுமதிக்க முடியாது. அப்படி பொருளாளரிடம்தான் கொடுக்க முடியும் என்றால், எங்கள் தரப்பு பொருளாளர் ரத்தினசபாபதியிடம் கொடுங்கள்’ என விடாப்பிடியாக வலியுறுத்தினர்.
இதனால் இன்று காலை முதல் வங்கி முன்பு பதற்றமும் பரபரப்பும் நிலவியது. இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு ஆட்சியில் இருக்கும் சூழலில், தங்களிடம் தங்க கவசம் தராவிட்டால் அது தங்களுக்கு பின்னடைவாக இருக்கும் என கருதியது. கடைசியில் அதிகாரிகளும், தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் நிலைமையை எடுத்துக் கூறி ஓபிஎஸ் தரப்பை சமாதானப் படுத்தியதாக தெரிகிறது.
அதைத் தொடர்ந்து ஓபிஎஸ்-டிடிவி என இரு தரப்புக்கும் வெற்றி-தோல்வி இல்லாமல், மதுரை ஆட்சியரிடம் தங்க கவசத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த ‘டிரா’ முடிவுக்கு ஓபிஎஸ்-ஸும் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே டிடிவி தரப்பினர் இதையே வலியுறுத்தி வந்ததால், அவர்கள் இதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கூறிக்கொண்டனர்.
இது குறித்து ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறுகையில், “பிரச்னை இல்லாமல் விழா நடைபெற வேண்டும் என்கிற எண்ணத்தில் நாங்கள் இதற்கு ஒப்புக் கொண்டோம்’ என்றார். பசும்பொன் ஜெயந்தி விழாவுக்கே உரிய பதற்றம் பரபரப்புக்கு மத்தியில், இந்தப் புதிய சிக்கல் சுமூகமாக தீர்ந்ததில் விழா நிர்வாகிகளுக்கு சற்றே நிம்மதி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.