முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக, திமுக தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்கத் தேவரின் 115- வது பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி “பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.” என்று தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் பாஜ தலைவர் அண்ணாமலை “கூடல் மாநகர் என்று சங்கம் போற்றிய மதுரை மாநகரில், கூடிய தாமரைச் சொந்தங்கள் சூழ்ந்து வர கோரிப்பாளையத்தில் தேவர் அய்யாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலைகளுடன் மரியாதைகள் செய்தோம்” என்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலையணிவித்து, அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ எம்எல்ஏக்கள், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . தேவர் ஜெயந்தி முன்னிட்டு மதுரை மாநகரில் முழுவதும் 2000 காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோரிப்பாளையம் அது சுற்றி உள்ள பகுதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.