கதிராமங்கலத்தில் தடைமீறும் போராட்டம் : பழ.நெடுமாறன், வைகோ பங்கேற்பு

ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூலை 10-ம் தேதி கதிராமங்கலத்தில் தடையை மீறி நுழையும் போராட்டத்தை பல அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துகின்றன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கதிராமங்கலம் கிராமத்தில் பதற்றம் தணிவதாகவே இல்லை.

கதிராமங்கலத்தில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மூலமாக இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராடி வருகிறார்கள். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.
\
அரசியல் கட்சித் தலைவர்கள், இதர பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை அங்கு நுழையவிடாமல் அதிகாரிகள் தடை செய்து வருகிறார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூலை 10-ம் தேதி கதிராமங்கலத்தில் தடையை மீறி நுழையும் போராட்டத்தை பல அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தமிழர்நல அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

கும்பகோணத்தில் இருந்து இவர்கள் கிளம்புகிறார்கள். தடையை மீறி கதிராமங்கலத்தில் நுழைவோம் என இவர்கள் அறிவித்துள்ளதால், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தை தொடங்கும் இடமான கும்பகோணத்திலேயே கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close