தேச துரோக வழக்கில் கைதான வைகோ ஜெயிலில் இருந்து இன்று காலை வெளியே வந்தார். புழல் சிறை வாசலில் மதிமுக தொண்டர்கள் அவருக்கு மலர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த வைகோ, சிறை வாசலில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ஜாமீனில் வெளியே வந்தேன். சிறைக்குப் போகும் போது ஜாமீன் கேட்கமாட்டேன் என்று சொல்லவே இல்லை. தண்டனை கிடைத்தாலும் சொன்ன சொல்லை மறுக்கமாட்டேன் என்றுதான் சொன்னேன். என் மீது போடப்பட்ட பொய் வழக்கு என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதாலேயே ஜெயிலுக்குப் போனேன். மத்திய அரசும், மாநில திமுக அரசும் செய்த துரோகத்தால்தான் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள். இது மக்களிடம் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். அது ஓரளவுக்கு நிரைவேறிவிட்டது.
சகோதரி ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் தமிழகத்தில் பலவேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையில் நல்ல மாற்றங்களை அமைச்சர் செய்து வருகிறார். அதை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் மக்கள் எழுச்சியை அடக்குமுறையை போலீசை கொண்டு அடக்கிவிட முடியாது. மதுவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பெண்கள் போராடி வருகிறார்கள். இனியும் அரசாங்கம் மதுக்கடைகளை நடத்த முடியாது. இதை உணர்ந்து பூரண மதுவிலக்கை கொண்டு வந்து மக்களிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும்.
ரஜினி அரசியலுக்கு வருவது கட்சி ஆரம்பிப்பது என்பது அவருடைய விருப்பத்தைப் பொறுத்தது. அது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை.
கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவுக்கு எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. விழா சிறப்பாக நடக்கட்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.