தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்றிரவு முதல் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகின்றது.
Advertisment
இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கின்றது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் கொள்ளிடம் நெடுஞ்சாலையில் கடல் போல் மழை நீர் தேங்கி நின்றது.
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கனமழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்த விபரம் வருமாறு; சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் இருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் பிரதான சாலையிலேயே முழங்கால் அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
மழை வெள்ளத்துக்கு மத்தியில் ஊர்ந்து செல்லும் பேருந்து
Advertisment
Advertisements
அருகிலுள்ள முதலைக்குளம் நிரம்பி அது வழியும் வடிகால் பகுதிகள் தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நிலையில் அந்த மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் கொள்ளிடத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் இச்சாலை வழியே செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்
வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. தண்ணீருக்குள் குழந்தைகள் பெண்கள் தவறி விழுந்து விடுகிறார்கள். எனவே, சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று சுப முகூர்த்த தினம் என்பதால் திருமணங்களுக்கு செல்லும் பொதுமக்கள், அலுவலகத்திற்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த கொள்ளிடம் காவல் நிலைய போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் நீரை அகற்ற நிரந்தரமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டுப் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil