வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, குடியாத்தம் மக்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தாமலே 13 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் செலுத்தி வருவதாகவும் அதற்கு தீர்வு காணக் கோரி வேலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவ்ர் சுரேஷ் குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
இது குறித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் குமார், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் அளித்துள்ள மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தின் வழியாக செல்கிறது. வாணியம்பாடி - பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தாமல் நேரடியாக பள்ளிகொண்டா சுங்கச் சாவடியை வந்தடைகின்றன. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தாத பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதி வாகனங்களும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இச்செயல் வாகன உரிமையாளர்களுக்கு கடுமையான பண சுமையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும், பயன்படுத்தாத ஒரு சாலைக்கு கட்டணம் செலுத்துவது அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். ஆகவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தி தலையிட்டு 2007 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 13 ஆண்டுகளா நடைபெற்று வரும் கட்டண கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சுங்கச்சாவடிகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பி வரும் சூழலில், 13 ஆண்டுகளாக பயன்படுத்தாத தேசிய நெடுஞ்சாலைக்கு பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துகிறார்களா? என்று வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசினோம்.
ஐஇ தமிழுக்கு சுரேஷ் குமார் கூறியதாவது: “சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் மாவட்டம் வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் வாணியம்பாடியிலிருந்து வருகிறவர்கள் அல்லது அந்த சாலையை சில கிலோ மீட்டர்கள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் பள்ளிகொண்டாவில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பேரணாம்பட்டுவில் இருந்து வேலூர் செல்கிற மக்கள் விழுப்புரம் - மேங்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறோம். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இது தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைப் சாலைப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. இதற்கு முன்பு இது மாநில நெடுஞ்சாலையாக இருந்தது. இது முற்றிலும் வேறு ஒரு சாலை. இந்த நெடுஞ்சாலை பள்ளிகொண்டா சுங்கச்சாவடிக்கு அருகே சரியாக ஒரு 100 மீட்டர் தொலைவில் சென்று இணைகிறது. 100 மீட்டர் மட்டுமே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் பேரணாம்பட்டு, குடியாத்தம் மக்கள் 13 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும். வேலூர் செல்லும் பேரணாம்பட்டு, குடியாத்தம் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும். பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வாகனங்களின் எண்களுடன் அதன் உரிமையாளர்களின் ஆதார் எண் இணைத்து ஒரு பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை மாவட்ட ஆட்சியரும் ஆமோதித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். முதல் கட்டமாக, சட்டப்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வேன்.” என்று சுரேஷ் குமார் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பேரணாம்பட்டு நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர் பஷிருதீன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறுகையில், “பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதியிலிருந்து வேலூர் செல்லும் வாகனங்கள் சென்னை - பெங்களூரு தெசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தாமலேயே பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துகின்றனர். இதனால், பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். அதனால், பள்ளிகொண்டா உள்ளூர் பகுதி வாகனங்களுக்கு பாஸ் வழங்குவதைப் போல, வேலூர் செல்லும் பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வாகனங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் கட்டண விலக்கு அளிக்கும் பாஸ் வழங்க வேண்டும்” என்று கூறினார்.
பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வாகனங்கள், வாணியம்பாடியில் இருந்து வரும்போது, இந்த கட்டண விலக்கை தவறாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த பஷிருதீன், “அப்படி வர வேண்டும் என்றால் ஆம்பூர், வாணியம்பாடி சென்றுதான் வரவேண்டும். அப்படி வருகிற வாகனங்கள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும். அதனால், பெரிய இழப்பு ஏதும் ஏற்படாது.” என்று கூறினார்.
ஆல் இந்தியா ஓட்டுநர் யுனிட் கசாம் சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரூபன் கூறுகையில், “பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதியில் இருந்து வேலூர் செல்லும் சிறிய கார் வாகனங்களிடம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 95 ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேன் போன்ற வாகனங்களுக்கு 145 ரூபாய் வசூலிகின்றனர். இதனால், எங்களைப் போன்ற வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பயன்படுத்தாத சாலைக்கு சுங்கக் கட்டணம் செலுத்துகிறோம். இதனால், சிலர், சாவடி கிராமத்து உள்ளே சென்று சுங்கச்சாவடியை கடந்து சென்று கொண்டிருந்தனர். வாகனங்கள் அதிகமாக செல்வதால் அந்த கிராமத்து சாலையில் விபத்துகள் நடந்ததால் அந்த கிராம மக்களும் வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால், வேறு வழி இல்லாமல் வேலூர் செல்கிற பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதி வாகானங்கள் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தாமலே சுங்கக்கட்டணம் செலுத்தி வருகிறோம். இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்” என்று கூறினார்.
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை பயன்படுத்தாமலே 13 ஆண்டுகளாக சுங்கச் சாவடி கட்டணம் செலுத்தி வரும் பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மனக் குமுறலுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.