திருவேற்காட்டில் தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். சொத்துப் பிரச்னையை திசை திருப்ப இந்த நாடகம் அரங்கேறியது.
சென்னையை அடுத்த திருவேற்காடு மேலஅயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் பரமானந்தம் (வயது 49). பாரதிய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஹரீஷ், செபஸ்டின் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு இரவு பரமானந்தம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் முன் பக்க அறையில் தூங்கினார். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அவர் திடுக்கிட்டு எழுந்ததாகவும், அப்போது 2 மர்ம நபர்கள் உடைந்த ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீட்டுக்குள் வீசியதாகவும், அறையில் இருந்த சோபாவில் விழுந்து வெடித்தது. இதனால் சோபா முழுவதும் தீப்பிடித்து எரிந்ததாகவும் போலீஸில் புகார் கூறினார்.
பெட்ரோல் அருகில் நின்ற தனது பனியனில் விழுந்து தீப்பிடித்ததாகவும், உடனடியாக அவர் தீயை அணைத்ததாகவும் கூறியிருந்தார். அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து அங்கு நின்ற 2 மர்ம வாலிபர்களையும் விரட்டி பிடிக்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் இருளில் தப்பி ஓடி விட்டனர் என்றும் கூறினார். தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரும் ஜட்டி மட்டுமே அணிந்து இருந்ததாகவும், திட்டமிட்டு அவர்கள் பரமானந்தம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் சாண்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பரமானந்தம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதிலும் சிலருடன் தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. இந்த மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்றும் விசாரணை நடந்தது. தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீஸார் துருவி துருவி விசாரித்தனர்.
அப்போதும், ‘நான் கடந்த 4 வருடமாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். பாரதிய ஜனதா சார்பில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வந்தேன். இது சிலருக்கு பிடிக்கவில்லை. எனது வளர்ச்சி பிடிக்காமல் அடிக்கடி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவித்து இருந்தேன். கடந்த ஒரு வாரமாக மிரட்டல் இல்லை.
ஆனால் இப்போது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டனர். குற்றவாளிகளை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினர் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.’ என விசாரணையில் பரமானந்தம் கூறினார்.
ஆனால் போலீஸாரின் தீவிர விசாரணையில் தமது சொந்த வீட்டில் தாமே பெட்ரோல் வெடிகுண்டை வீசி அவர் நாடகமாடியதாக தெரிய வந்தது. அந்த ஊரில் கோவில் அருகேயுள்ள ஒரு சொத்துப் பிரச்சனையை திசை திருப்ப தாமே தமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது வீட்டில் தானே குண்டு வீசியதாக பாஜக நிர்வாகி கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.