பெட்ரோல் பங்குகள் 13-ம் தேதி அடையாள வேலைநிறுத்தமும், அக்டோபர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் செய்ய இருக்கின்றன.
பெட்ரோல் பங்குகளின் வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோலுக்கு கமிஷன் தொகையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். தினமும் பெட்ரோல் விலை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ம் தேதி நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளை மூடி போராட்டம் நடத்துகிறார்கள். அதன்பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்.27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். வீடுகளுக்கு நேரடியாக பெட்ரோல் கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டம் பாதுகாப்பானது அல்ல என பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 6 மாதத்துக்கு ஒருமுறைதான் பெட்ரோல் டீலர்களுக்கான கமிஷன் தொகையை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் ஒரே விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசு தரப்பில் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.