மார்பக புற்றுநோயை வேரறுப்பதற்கான பெருமைமிகு ஓட்டம்: பிங்கத்தான்

இன்று பெண்கள் பரவலாக பாதிக்கப்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், பெண்கள் தங்கள் உடல்நலத்தை பேண வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும், சென்னை தீவுத்திடலில் பிங்கத்தான் எனப்படும் ஓட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இதில், 3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. ஆகிய பிரிவுகளின் கீழ் பெண்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். இதனை பிங்கத்தான் நிறுவனர் மிலிந்த் சோமன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பிங்கத்தானில் கலந்துகொண்ட பெண்களுக்கு தனியார் மருத்துவமனை சார்பாக, இலவச மருத்துவ பரிசோதனை, 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் என்ற மார்பக பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

மார்பக புற்றுநோயை முற்றிலும் ஒழிக்கும் விதமாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில், பார்வைத்திறன் பாதிப்புடைய 30 பெண்கள் மற்றும் செவித்திறன் பாதிப்புடைய 150 பெண்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

பிங்கத்தான் குறித்து பேசிய மிலிந்த் சோமன், “ஆரோக்கியமான குடும்பம், ஆரோக்கியமான தேசம் மற்றும் ஆரோக்கியமான உலகம், அதிகாரம் பெற்ற பெண்களிலிருந்தே தொடங்குகிறது. அதிகாரம் பெறுவதில் முதல்படிநிலை பெண்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது தான்” என கூறினார்.

×Close
×Close