மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸை அங்கீகரித்து இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்தது தொடர்பான ஆதாரங்களுடன் ஆஜராக தமிழக சுகாதார துறை செயலாளருக்கு உத்தரவிட கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த ஆண்டு தஞ்சாவூர், அரவக்குறிச்சி, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.
தேர்தல் நடந்த நேரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர் போஸை அங்கீகரித்து வேட்புமனுவில் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுசெய்து, அதை சென்னை அரசு பொது மருத்துவமனை பேராசிரியர் பாலாஜி சான்றளித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தல் வழக்கில் இந்த ஆவணம் மிக முக்கியமானது என்பதால், இது தொடர்பான ஆவணங்களுடன் மாநில சுகாதாரத் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவுடக்கோரி திமுக சரவணன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த முழு விவரங்கள் சுகாதாரத் துறை செயலாளருக்கு தெரியும் என்பதால், கைரேகையை சான்றளிக்க மருத்துவர் பாலாஜி நியமிக்கப்பட்டது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் அழைத்தது, அவர்கள் அளித்த பேட்டிகள் ஆகிய விவரங்கள் அடங்கிய அவணங்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு பதிலளிக்க ஏ.கே.போஸ் தரப்புக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதி வேல்முருகன் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.