குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர்: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

குடிநீருக்கு தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அவலமும், விவசாயம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது.

பெப்சி, கோக் போன்ற குளிர்பான நிறுவனங்கள் உள்பட நெல்லை சிப்காட்டில் இயங்கி வரும் 25 நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இது தவிர விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பல ஊர்களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல், நெல்லை மாவட்ட சிப்காட்டில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், குடிநீருக்கு தட்டுப்பாடுள்ள நிலையில், சிப்காட்டில் இயங்கி வரும் பெப்சி, கோக் போன்ற குளிர்பான நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுவது குறித்து நீண்ட நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசோ இதற்கெல்லாம் செவி சாய்ப்பது போல் தெரியவில்லை. மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ராகவன் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், பெப்சி, கோக் போன்ற குளிர்பான நிறுவனங்கள் உள்பட நெல்லை சிப்காட்டில் இயங்கி வரும் 25 நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நாள்தோறும் சுமார் 40 லட்சம் லிட்டருக்கும் மேல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், குடிநீருக்கு தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அவலமும், விவசாயம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. எனவே, சிப்காட் நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை இன்று வழங்கினர். அப்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாவும், இதர தொழிற்சாலைகளுக்கு அவற்றின் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, சிப்காட் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட மனுவில், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அளவில் பாதி சதவீதம் தான் ஏற்கனவே வழங்கினர். தற்போது வறட்சி காரணமாக பத்து சதவீத நீரே வழங்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.

×Close
×Close