தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி முதல் ஜூலை மாதம் 19-ம் தேதி வரை நடைபெற்றது. அதில், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் கடைசி நாளில், விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார். அதில், முக்கியமாக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.55,000-லிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
மேலும், எம்.எல்.ஏ.-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, இரண்டு கோடியிலிருந்து இரண்டரை கோடியாகவும், எம்.எல்.ஏ.-க்களின் ஓய்வூதியம் ரூ.12,000-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படுவதகாவும் முதல்வர் அறிவித்தார். இந்த ஊதிய உயர்வு அறிவிப்பானது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், தமிழகத்துக்கு ரூ.46,000 கோடி கடன் உள்ளதால் ஊதிய உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், சட்டரீதியான கருத்துக்கள் எதுவும் மனுவில் இடம் பெறவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.