பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம்

பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தன. பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 331 பேர். மாணவிகள் 4 லட்சத்து 77 ஆயிரத்து 931 பேர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் தேர்வெழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 9 லட்சம் பேரில் 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1,171 பேர் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர்.

பள்ளிகளுக்கு இடையே தேவையற்ற போட்டிச்சூழலை உருவாக்கும் “ரேங்க்” முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநில, மாவட்ட வாரியாகவோ, பாடவாரியாகவோ “ரேங்க்” பட்டியல் எதுவும் இந்த ஆண்டு வெளியிடப்படவில்லை.

தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்களுக்கு, முதலில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்தனர்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிந்த நிலையில், மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு பதிவையும் பள்ளிகளில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படுள்ளது. ஏற்கனவே, 10-ம் வகுப்பில் பதிவு செய்திருக்கும் மாணவர்கள், அந்த வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டையின் நகல், குடும்ப அட்டையின் நகல் உள்ளிட்ட விவரங்களை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலும் வேலை வாய்ப்பு பதிவை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.

×Close
×Close