அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!!

முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதியன்று மாணவர்களிடையே சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது நினைவிடம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே பேக்கரும்பு பகுதியில் உள்ளது. அங்கு, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அவருக்கு பிரமாண்ட மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27-ம் தேதி (இன்று) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மத்திய, மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பேக்கரும்பை சென்றடைகிறார்.

அப்துல்கலாம் நினைவகத்தை பிரதமர் மோடி திறந்ததும் நாடு முழுவதும் உள்ள மாணவ – மாணவிகள் ‘கலாம் சலாம்’ பாடலை பாடுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5 கோடி மாணவர்கள் இந்த பாடலை ஒரே நேரத்தில் பாடுவார்கள். அதாவது நினைவகம் திறக்கப்படும் 11 மணி முதல் 11.03 மணி வரை பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் “அப்துல்கலாம்-2020” என்ற சாதனை பிரசார வாகனத்தையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். அதேபோல், ராமேஸ்வரம் – அயோத்தி இடையேயான புதிய ரயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை பகுதி என்பதால் இந்திய கடலோர காவல்படையும், தமிழக கடலோரா காவல்படையும் கடல்வழி பாதுகாப்பை மேற்கொண்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close