இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் முக்கிய அம்சம் விவேகானந்தர் மண்டபம். கடல் நடுவே ஒரு பாறையில் அமைந்திருக்கும் இந்த மண்டபம் இப்போது பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இந்திய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதுவும் சுமார் 24 மணி நேரம் பிரதமர் மோடி அங்கு அமர்ந்து தியானம் செய்ய இருப்பது அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
132 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் வருகை தந்த இடம் இது. இங்கு கடல் நடுவே அமைந்திருக்கும் இந்தப் பாறை விவேகானந்தரை கவர்ந்தது. அப்போது படகு வசதிகள் எதுவும் இல்லாததால், கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் நீந்தியே அந்தப் பாறையை அடைந்தார் விவேகானந்தர். அங்கு மூன்று நாட்கள் அவர் தியானம் செய்தார். இதன் பிறகு அமெரிக்காவில் விவேகானந்தர் பங்கேற்று ஆற்றிய உரை உலகம் முழுவதும் பெரும் கவனம் பெற்றது.
விவேகானந்தர் தியானம் செய்த அந்தப் பாறையில் 1972-ல் விவேகானந்தர் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி வி.வி கிரி இதனை திறந்து வைத்தார். அதன் பிறகு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இதற்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் பயணித்து விவேகானந்தர் மண்டபத்தை தரிசிக்காமல் செல்வதில்லை.
விவேகானந்தர் மண்டபத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை இருக்கிறது. அதற்கு கீழ்தளத்தில் தியான அறை உண்டு. இந்த அறை தான் விவேகானந்தர் தியானம் செய்த இடமாக கருதப்படுகிறது. முழுக்க இருள் சூழ்ந்து இருக்கும் இந்த அறையில், எப்போதும் முழு அமைதி இருக்கும். ரெகுலரான சுற்றுலாப் பயணிகள் தவிர அவ்வப்போது வி.ஐ.பி- களும் இங்கு வந்து சில நிமிடங்கள் தியானம் செய்வது வழக்கம்.
விவேகானந்தர் கேந்திரம் மூலமாக நிர்வகிக்கப்படும் இந்த மண்டபத்திற்கு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் வருகையும் வழக்கமானது தான். 2004-ல் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தனது ரத யாத்திரையின் போது இங்கு வந்து சுமார் அரை மணி நேரம் தியானத்தில் செலவிட்டார். ஆனால், விவேகானந்தருக்கு பிறகு முதல் முறையாக இங்கு இரவிலும் ஒருவர் தங்கி இருந்து தியானம் செய்யப் போகிறார் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே.
மோடியின் நிகழ்ச்சி நிரல் செவ்வாய்க் கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 30-ம் தேதி மாலையில் மோடி கன்னியாகுமரி வந்து விடுவதாகவும், 1-ம் தேதி மதியம் இங்கிருந்து கிளம்புவதாகவும் அதிகாரபூர்வ அறிக்கை கூறுகிறது. விவேகானந்தர் மண்டப தரிசனம் பற்றி அதில் எதுவும் இல்லை.
எனினும், அதிகாரிகள் மட்டத்தில் மோடியின் தியான நிகழ்வுகளை உறுதிப்படுத்துகிறார்கள். விவேகானந்தர் கேந்திரம் சார்பில் கன்னியாகுமரியில் தங்கும் வசதிகள் மிகுந்த வளாகம் இருக்கிறது. அங்கேயே மோடி 30-ம் தேதி இரவில் தங்குகிறார். மறுநாள் 31-ம் தேதி காலையில் அவர் படகு மூலமாக விவேகானந்தர் மண்டபத்தை அடைகிறார். உத்தேசமாக 24 மணி நேரம் அங்கு தியானம் செய்துவிட்டு ஜூன் 1-ம் தேதி மதியம் அவர் விவேகானந்தர் மண்டபத்தை விட்டு கிளம்புவார் என தெரிகிறது.
பாதி நேரம் விவேகானந்தர் முழு உருவச்சிலை முன்பும், மீதி நேரம் தியான அறையிலும் மோடி தியானம் செய்யக்கூடும் என்கிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் விவேகானந்தருக்குப் பிறகு யாரும் அங்கு இரவில் தங்கி இருந்து தியானம் செய்ததாக பதிவுகள் இல்லை. பெரும்பாலும் விவேகானந்தர் மண்டப பாதுகாப்பு ஊழியர்கள் தவிர வேறு யாரும் இரவில் அங்கு தங்குவதே இல்லை. இந்த மண்டபத்தின் 52 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மோடி தான் அங்கு இரவில் தங்கி இருந்து தியானம் செய்ய இருக்கிறார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் இதே போல கேதர்நாத் சென்றார் மோடி. இப்போது கன்னியாகுமரி. மோடியின் வருகையால் விவேகானந்தர் மண்டபம் இன்னும் முக்கியத்துவம் பெற்று, வடமாநில சுற்றுலா பயணிகள் நிறைய வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு கன்னியாகுமரி வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதேசமயம் விடுமுறை கால சீசன் முடியும் தருவாயில் மோடியின் வருகையை முன்னிட்டு ஓரிரு நாள் போலீஸ் கெடுபிடியால் வணிகம் பாதிக்குமோ என்றும் அஞ்சுகிறார்கள். கன்னியாகுமரி மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் பாதையில் தான் விவேகானந்தர் பாறை அமைந்திருக்கிறது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
அரசியல் வட்டாரத்திலும் மோடி வருகை உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டம் தான் பா.ஜ.க-வுக்கு ஆதரவு மிகுதியான மாவட்டம். அந்த வகையில் மோடியின் இந்த வருகை பா.ஜ.க-வினருக்கு மகிழ்ச்சி. முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் மே 31, ஜூன் 1-ம் தேதிகளில் கன்னியாகுமரியில் முகாமிடக் கூடும். ஆனாலும் மோடியின் தியான நிகழ்வு முழுக்க தனிப்பட்ட நிகழ்வு என்பதால், விவேகானந்தர் மண்டபத்திற்கு கட்சிக்காரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. அண்ணாமலை, பொன்னார், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஹெலிகாப்டர் தளத்தில் மோடியை வரவேற்க வாய்ப்பு இருக்கிறது.
இதை எல்லாம் விட முக்கியமான இன்னொரு எதிர்பார்ப்பு விவேகானந்தர் மண்டபம் அருகே, அதேபோல கடல் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு மோடி செல்வாரா? என்பதுதான். இதற்கு விடை மே 31, ஜூன் 1-ம் தேதிகளில் தெரியும்.
குறிப்புகள்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஜூன் 1, 2, 3 தேதிகளில் கன்னியாகுமரியில் முகாமிடுகிறார். இங்கு மோடியை அவர் சந்திக்க கூடும் என ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள். அதேபோல சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க அமைப்புச் செயலாளர் சந்தோஷ் கன்னியாகுமரியில் முகாமிட்டு கட்சி பாகுபாடு இல்லாமல் இந்த பகுதி பிரதிநிதிகளை அழைத்து பேசியிருக்கிறார். கன்னியாகுமரியின் வளர்ச்சி பற்றி அதிக அக்கறையுடன் அவர் கேட்டதாக கூறுகிறார்கள். மோடியின் இந்த வருகைக்கு அது முன்னோட்டமா? என்றும் விவாதம் நடக்கிறது.
கன்னியாகுமரி செய்தியாளர் த.இ தாகூர் தகவல்கள் உதவியுடன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.