நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "வரும் டிசம்பர் மாதம் தங்கள் அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்போவதாகவும், அதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் வைக்கப்பட உள்ளது. அப்படத்தை திறந்து வைக்குமாறும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து உள்ளோம்" என்றார்.
இந்நிலையில், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "19.5.2017 அன்று பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் எங்கள் அணியினர் தமிழ்நாட்டின் நலனுக்காக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கவும், சேலம் உருக்காலை பிரச்சனையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அத்திக்கடவு–அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், வரும் அக்டோபர் மாதம், அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) சார்பில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, பிரமாண்டமாகவும், எழுச்சியாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறி, அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
விழாவில் உறுதியாக கலந்துகொள்வதாக பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார். விழா நடைபெறும் தேதியை தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா, தினகரன் சிறைக்குச் சென்ற பின், இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிணைய வேண்டும் என்பதே ஒவ்வொரு அதிமுக கடைநிலை தொண்டனின் எண்ணமாக இருந்தது. ஆனால், பதவிச் சண்டையில் இரு அணிகளுமே இன்றுவரை பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. மாறாக, ஒருவரையொருவர் தினம் குற்றம் சொல்லி வருகின்றனர்.
இதில் உச்சக்கட்டமாக, ஓ.பி.எஸ். - இ .பி.எஸ். ஆகிய இருவருமே, பிரதமர் மோடியை சந்தித்து, தாங்கள் நடத்தும் விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போக்கு இருவரின் சண்டையை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது. இப்போது பிரதமர் யார் நடத்தும் நிகழ்விற்கு வந்து பங்கேற்பார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. எது எப்படியோ, பதவிச் சண்டைக்காக நடக்கும் இந்த 'போரை' மக்கள் உற்று நோக்குகின்றனர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்தால் நல்லது.