பிரதமர் நரேந்திர மோடி, தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்கவும் ஐஏஎஸ் அதிகாரி இல்ல விழாவில் பங்கேற்கவும் இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்துல் கலாம் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வந்தார். அதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி அஞ்சலி செலுத்த அவர் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 6) அவர் சென்னைக்கு வருகிறார். சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழக அரங்கில் தினத்தந்தி நாளிதழின் பவழவிழா திங்கட்கிழமை காலையில் நடக்கிறது. அதில் கலந்துகொண்டு பவழவிழா மலரை நரேந்திர மோடி வெளியிடுகிறார். தொடர்ந்து பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் இல்லத் திருமண விழாவிலும் சென்னையில் பங்கேற்கிறார்.
இதற்காக காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார் நரேந்திர மோடி. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அவரை வரவேற்கிறார்கள். பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் திரள்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் கார்கோ கேட் அருகே சின்ன மேடையில் தன்னை வரவேற்க வந்த பாஜக-வினர் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். வேறு கட்சி நிகழ்ச்சிகள் இல்லாததால், இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக-வினர் பெருமளவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கடற்கரை சாலை நேப்பியர் பாலம் அருகே இருக்கும் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து சொற்ப தொலைவில் உள்ள சென்னை பல்கலைக்கழக அரங்கிற்கு காரில் வருகிறார் மோடி. அங்கு தினத்தந்தி விழாவில் பங்கேற்கிறார்.
விழா 10.20 மணிக்கு தொடங்கி 11.30 மணிக்கு முடிகிறது.
பின்னர் சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலை வழியே சாந்தோம் பகுதியில் இருக்கும் எம்.ஆர்.சி திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த திருமண நிகழ்ச்சிக்காக கடற்கரை சாலை மட்டுமே பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மூடப்படும் என தெரிகிறது.
திருமண நிகழ்ச்சி முடிந்ததும் எம்.ஆர்.சி. மண்டபத்தில் இருந்து சாலை மார்க்கமாக 12.15 மணிக்கு கிளம்பி மீண்டும் நேப்பியர் பாலம் அருகேயுள்ள கடற்படை தளத்தை அடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பி, சென்னை விமான நிலையம் வந்து டெல்லி செல்கிறார்.
அடுத்தடுத்து இரு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டாலும், சாலை மார்க்கத்திற்கு கடற்கரை சாலையை மட்டுமே அவர் பயன்படுத்துகிறார். எனவே பெரிதாக சென்னையில் டிராஃபிக் ஜாம் ஆகும் வாய்ப்பு இல்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேசமயம் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கும் கூட்டத்தினர், பின்னர் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் வர இருப்பதால் சில இடங்களில் நெரிசல் ஏற்படலாம்.
இவற்றைத் தாண்டி சென்னை விமான நிலைய வரவேற்பில் தமிழக அரசியல் குறித்து மோடி என்ன உரை நிகழ்த்தப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.