Advertisment

எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் இருந்தாலும் வரவேற்கிறோம் - பாமக வழக்கறிஞர் பாலு

இது ஒரு நீண்ட காலமான கோரிக்கை. அரசியல் காரணமாக இருந்தாலும்கூட அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம் என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

author-image
Balaji E
New Update
எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் இருந்தாலும் வரவேற்கிறோம் - பாமக வழக்கறிஞர் பாலு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 21 தியாகிகளின் நினைவாக விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியமும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Advertisment

தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் தங்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு கோரி 1987 போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்னியர்கள் நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தில் தமிழகமே ஸ்தம்பித்தது. அப்பொது நடைபெற்ற வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, சாலைகளில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு போக்குவரத்தை தடுத்தார்கள் என்று இன்றைக்கும் பாமகவின் மீது விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்.

வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டத்தில், உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு, ஓய்வூதியம், அவர்களின் வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பாமக வலியுறுத்தி வந்தது.

அதனைத் தொடர்ந்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் என்ற பிரிவில் வன்னியர்கள் உள்ளிட்ட சமூகத்தினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, பாமக, வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாமக சார்பில், வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சென்னையே ஸ்தம்பித்தது.

இதையடுத்து, அப்போது ஆட்சியில் இருந்த முந்தைய அதிமுக அரசு, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து சட்டம் நிறைவேற்றியது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு நிறைவேற்றிய வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த அரசாணையாகவும் வெளியிட்டார். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளிலும் தமிழக அரசு இந்த சட்டத்தை ஆதரித்து வாதிட்டு வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸும் திமுக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றார்.

இந்த சூழ்நிலையில்தான், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில், பெரிய அழுத்தங்கள், கோரிக்கைகள் ஏதுமின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 2ம் தேதி 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுப் பேசினார். அப்போது, “சமூகநீதி கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம். வகுப்புரிமை வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு, சாதி ரீதியிலான ஒதுக்கீடு என்று எந்த பெயரைச் சொல்லி அழைத்தாலும் அது சமூகநீதி என்ற ஒற்றைச் சொல் குறிக்கும் பொருளை வேறு எந்த சொல்லும் தருவது கிடையாது.

அத்தகைய சமூகநீதி கொள்கைதான் திராவிட இயக்கம், இந்த தமிழ் சமுதாயத்திற்கு கொடுத்த மாபெரும் கொடையாகும் அது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே இந்த சமத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது.

வகுப்புரிமை எனும் இடஒதுக்கீட்டு முறையை 100 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு கொண்டு வந்தது நீதிக்கட்சி. மூடப்பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகார பதவிகள் அனைத்தையும் அனைவருக்கும் ஆக்கியது. சுந்ததிர அதற்கு சட்டரீதியான இடர்பாடு வந்தபோது தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து முன்னெடுத்த போராட்டம்தான் அது.

இந்திய துணை கண்டத்தையே அது கவனிக்க வைத்தது. பெருந்தலைவர் காமராஜர் அதனை பிரதமராக இருந்த நேருவிடத்திலே வலியுறுத்தியதன் காரணமாக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் சமூகநீதி கொள்கைக்கு இந்திய அரசின் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அப்படி சமூகநீதி அடைய பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுகீட்டை உறுதிபடுத்தியதும் காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றம் பெற்றுத் தந்ததும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக வரலாற்றிலே இருக்கின்ற அந்த சரித்திர சான்று மறைக்க முடியாத சாசனமாக அமைந்துள்ளது. சமூக நீதிக்காக நடைபெற்ற 20 விழுகாடு தனி இடஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த போராட்டத்தை அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு 21 பேர் பலியாயினர். சமூகநீதி போராளிகளான அவர்களின் உயிர் தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில் 1989ம் ஆண்டு அமைந்த கலைஞர் தலைமையிலான் அரசு, இந்தியாவிலேயே முதல்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றா பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

சமூகநீதி கொள்கையின் தொடர்ச்சியாக கலைஞர் வழியில் செயல்படும் நம்முடைய அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நடைமுறை படுத்தியிருக்கிறோம். ஒதுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும் அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மீட்கப்பட வேண்டும் என்பதே திமுக அரசின் உயர்ந்த நோக்கமாகும்.1987ம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டுக்கு பலியான 21 தியாகிகளின் நினைவாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவன். மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடம் உண்டு. நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால் பின்தங்கிய வகுப்பினருக்காக எனது உயிரையே பணயம்வைத்து போராடுவேன், என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலே அன்றை முதல்வராக இருந்த கலைஞர் சொன்ன வார்த்தைகள் அது. அந்த உறுதிமொழியை நானும் ஏற்றுக் கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 பேருக்கு தமிழக அரசு விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு தமிழக அரசு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது குறித்து தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பாமக வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். அவர் கூறியதாவது: “இது வரவேற்கக்கூடிய ஒரு நல்ல அறிவிப்புதான். நீண்ட காலமாகவே பாமக, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தமிழக அரசு தியாகிகளாக அறிவிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளிக்க வேண்டும். அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால், தமிழக அரசு மணிமண்டபம் கட்டப்படும் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.

சமூகநீதி வரலாற்றுப் பயணத்தில் நடந்த நிகழ்வுகளை பேசுகிறபோது, 1980ல் இருந்து 1987 வரை நடந்த வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தை திராவிட கட்சிகள் பேசுவதில்லை. நான் குறிப்பாக சொல்கிறேன், அதை திராவிடக் கழகம் பேசுவதில்லை. திராவிடக் கழகத்தினுடைய வரலாற்றுச் சுவடுகளில், அல்லது ஆவணங்களில், 1987ல் நடந்த சாலை மறியலும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தையும் அவர்கள் இடஒதுக்கீடு போராட்டத்துகாக நடந்த வரலாறாகவே பதிவு செய்யவில்லை.

அப்போது, இடஒதுக்கீடு போராட்டம் ஒரு சமுதாயத்துக்காக செய்தார்கள். மரம் வெட்டினார்கள் என்ற அவப்பெயர் இவ்வளவு நாளாக இருந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளுக்கு அவர்களை கௌரவிக்கிற வகையில், மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருபதன் மூலம் அரசு அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அது ஒரு பெரிய ஆறுதலை தருகிறது. அந்த இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கிற நிறைய பேருக்கு இது ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது.” என்று கூறினார்.

இதற்கு முன்பு, திமுக 2006-2011 ஆட்சியில் இருந்திருக்கிறது. அதற்கு முன்னாடி இருந்தே பாமக இந்த கோரிக்கையை வலியுறுத்திகொண்டுதான் இருந்தது. ஆனால், திமுக அதை பரிசீலிக்கவில்லை. அதற்கு பிறகு வந்த அதிமுகவும் கவனிக்கவில்லை. ஆனால், அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி வன்னியர்களை ஈர்த்தது. அதனால், திமுக வன்னியர்களை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுக அரசு மணிமண்டபம் கட்டப்படும் என்று ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. குறித்து உங்கள் கருத்து என்ன என்று பாமக வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: “எல்லாவற்றிலும் ஒரு அரசியல் இருப்பதை தவிர்க்க முடியாது. ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பின்னால் ஒரு அரசியல் என்பது இருக்கும். வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் சட்டம் அதிமுக கொண்டுவந்தது என்பது வன்னியர்களுக்கு மிகபெரிய அளவில் பயன்தரக்கூடிய ஒன்றாக இருந்தது. இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி ஒன்றை செய்தால் மற்றொரு கட்சி அதை ஆதரிக்காமல் இருந்த சூழ்நிலையில், 10.5 சதவீதம் இடஒதுக்கிட்டை பொறுத்தவரை திமுக அதை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தது. இப்போது, இது ஒரு நீண்ட காலமான கோரிக்கை. அரசியல் காரணமாக இருந்தாலும்கூட அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் தமிழக அரசு செய்துகொண்டுவருகிறது. இதெல்லாம் வரவேற்கக்கூடியது. எல்லாவற்றிலும் ஒரு அரசியல் இருக்கும். அதைவைத்துதான் எல்லாமே பேசுவார்கள். அதைத் தாண்டி இது ரொம்ப அவசியமானது. வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Cm Mk Stalin Pmk Vanniyar Vanniyar Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment