சவால் விடுத்த செங்கோட்டையன்: காத்திருந்த அன்புமணி

அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்துவதற்காக காத்திருந்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

பள்ளிக் கல்வித்துறையில் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்துவதற்காக காத்திருந்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

பள்ளிக் கல்வித் துறை செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்றவுடன் கல்வி கற்றல் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு அறிவிப்புகள் நாள்தோறும் வெளியாகி மாற்றத்தை எதிர்நோக்கி வருகிறது.

பொதுத் தேர்வுகளில் தரவரிசை வெளியிடும் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு, மேல்நிலைக் கல்வியில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் தேர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட சீர்திருத்தங்களையும் அறிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ் நாடு மாநில கல்வி திட்டம், பாடத்திட்டம், பாடநூல் எழுதும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாயமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட, தமிழக அரசின் பாடத்திட்டம் தரமானதாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பள்ளி கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு முக்கிய காரணமாக அறியப்படுபவர் உதயச்சந்திரன். இந்நிநிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக உதயச்சந்திரன் பணியிட மாற்றம் குறித்த தகவலுக்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளிக்கல்வி துறையை விமர்சித்து அறிக்கை விடுபவர்கள் என்னுடன் ஒரே மேடையில் விவாதத்துக்கு தயாரா?” என்று அதிரடி சவால் விட்டார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையனின் சவாலை ஏற்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சருடன் விவாதிக்க தயார் என பதில் சவால் விட்டார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவை அரங்கத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு விவாதம் நடத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருந்தார். இந்த விவாதத்தில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் ராஜா அண்ணாமலை புரத்துக்கு வருகை தந்தார். அமைச்சர் செங்கோட்டையனின் வரவுக்காக, விவாத மேடையிலேயே நீண்ட நேரம் அன்புமணி ராமதாஸ் காத்திருந்தார். ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் வரவில்லை. இதனால், ஏமாற்றத்துடன் அன்புமணி ராமதாஸ் திரும்பிச் சென்றார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக் கல்வித்துறை குறித்து குற்றம்சாட்டுவதற்காக நான் விவாதத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. பள்ளிக்கல்வித்துறை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்தரங்கமாக இது இருக்கும் என்று எண்ணினேன். அவர் வராதது எனக்கு வருத்தம். உதயச்சந்திரனை பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமித்ததுற்கு நான் பாராட்டு தெரிவித்திருந்தேன். எல்லா இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரிகளும் உதயச்சந்திரன் போல் இருந்தால் தமிழகம் எப்போதோ முன்னேறியிருக்கும். 90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் ஊழல் பேர்வழிகள் தான் என்றார். மேலும், நீட் தேர்வு விலக்குக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்லவில்லை, தம்மீதுள்ள வழக்குகளை கவனிக்கவே சென்றுள்ளார் எனவும் அன்புமணி தெரிவித்தார்.

×Close
×Close