சோறு போடும் கடவுள்களுக்கு தமிழக அரசு செய்திருப்பது மிகப்பெரும் துரோகம்! – அன்புமணி ராமதாஸ்

சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள உழவர்கள் எவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர்களில் பெரும்பான்மையினர் கடன் வாங்கி கரும்பு சாகுபடி செய்பவர்கள் தான்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “வாக்களித்த மக்களுக்கும், வாழ வைக்கும் உழவர் பெருமக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் வழக்கம் தங்களுக்கு இல்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். உழவர்களை நம்ப வைத்து துரோகம் செய்த தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தனியார், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற்குரிய விலை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய விலையில் குறிப்பிட்ட தொகையை வழங்காமல் நிலுவையில் வைத்துக் கொள்கின்றன. அந்த வகையில் மட்டும் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1454.56 கோடி, 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.198.44 கோடி, இரு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ரூ.48.35 கோடி என மொத்தம் ரூ.1701.35 கோடி பாக்கி வைத்துள்ளன. இவற்றை திரும்பப்பெற விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், கடந்த 14-ஆம் தேதி தமிழக அரசு & உழவர் அமைப்புகளிடையே பேச்சு நடத்தப்பட்டது.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களின்போது, விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் டன்னுக்கு ரூ.125 வீதம் ரூ110 கோடி தீப ஒளித் திருநாளுக்கு ஒருநாள் முன்பாக 17-ஆம் தேதி திங்கட்கிழமை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதேபோல், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.198.44 கோடியில் ரூ.12.26 கோடி தீபஒளிக்கு முன்பாக வழங்கப்படும் என அமைச்சர் முன்னிலையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், தீபஒளித் திருநாள் முடிந்து 5 நாட்களாகியும் இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள உழவர்கள் எவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர்களில் பெரும்பான்மையினர் கடன் வாங்கி கரும்பு சாகுபடி செய்பவர்கள் தான். கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான முழு தொகையையும் சர்க்கரை ஆலைகள் வழங்காததால் உழவர்களால் கடனிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. தீபஒளி திருநாளுக்கு முன்பாக நிலுவைத் தொகை வழங்கப்படும் என அரசு உறுதியளித்திருந்ததால் அதைக் கொண்டு தீபஒளித் திருநாளைக் கொண்டாடலாம் என்று உழவர்கள் நம்பியிருந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கை மீதும், தீபஒளித் திருநாள் கொண்டாட்டங்கள் மீதும் மண்ணை வாரி இறைத்து துரோகம் செய்துள்ளது அரசு. இதை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.900 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருந்தது. அந்த தொகையை ஒரு சில மாதங்களில் விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அதன்பின் 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், நிலுவைத் தொகை இரு மடங்காக உயர்ந்திருக்கிறதே தவிர, குறையவில்லை. இதுதொடர்பாக ஆட்சியாளர்கள் அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் எழுதப்பட்ட எழுத்தாக கரைந்துவிட்டன.

உழவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடமிருந்து விரைவாக வசூலித்து வழங்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உழவர் அமைப்புகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை. தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கடந்த 11-ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்திய உழவர்கள் மீது காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. காவல்துறை தாக்குதலில் ஏராளமான உழவர்கள் காயமடைந்தனர். சோறு போடும் கடவுள்களான உழவர்கள் மீது தமிழக அரசு காட்டும் அக்கறை இதுதான் போலும் .

கரும்புக்கு போதிய கொள்முதல் விலை வழங்கப்படாததாலும், நிலுவைத் தொகை அதிகரிப்பதாலும் பெரும்பாலான உழவர்கள் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு வேறு பயிர்களுக்கு சென்று விட்டனர். இதனால் நடப்பாண்டில் தமிழகத்தில் கடுமையான சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டுமானால் கரும்பு சாகுபடி லாபமானதாக மாற வேண்டும். அதற்காக சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை இம்மாத இறுதிக்குள் பெற்றுத் தரவும், கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4000ஆக உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pmk anbumaniramadoss blames tn government for cheated farmers

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com