பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மது வணிகம் செய்ய பிறப்பிக்கப்பட்ட தடை நகர்ப்புறங்கள் வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நெடுஞ்சாலையோரங்களில் மூடப்பட்ட 1700 மதுக்கடைகளை திறக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மாநகரங்கள் மற்றும் நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்தவும், விடுதிகளில் குடிப்பகம் நடத்தவும் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம் உச்சநீதிமன்றம் தவறிழைத்து விட்டது. கள நிலைமைகளையும், எதார்த்தங்களையும் அறிந்து கொள்ளாமல் இப்படி ஒரு தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியிருக்கிறார்கள் என்பதையும், இப்படி ஒரு தீர்ப்பை வழங்கும்படி அவர்களுக்கு மனரீதியிலான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மிகவும் தெளிவாக உணர முடிகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு திசம்பர் மாதம் 15&ஆம் தேதியும், கடந்த மார்ச் 31ஆம் தேதியும் தீர்ப்பளித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் மிகப்பெரிய தேசத்துரோகம் செய்து விட்டது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மது வணிகத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்தியாவில் சுற்றுலாத் தொழில் முற்றிலுமாக அழிந்து விட்டது போன்றும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது - இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டனர் என்றும் மது லாபிகள் செய்திகளை பரப்பின. அத்தகைய செய்திகளுக்கு ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்தன. இப்படி படிப்படியாக அழுத்தத்தை அதிகரித்து, தங்களின் தீர்ப்பால் இந்தியச் சுற்றுலாத்துறையே பாதிக்கப்பட்டு விட்டதோ என்ற எண்ணம் நீதிபதிகள் மனதில் ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்து தான் இப்படி ஒரு தீர்ப்பு பெறப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த விஷயத்தில் சக்தி வாய்ந்த மது லாபி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 3321 மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 90 ஆயிரம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு எதிரான வகையில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக முந்தைய வழக்கின் மனுதாரர் என்ற வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதியை அழைத்துக் கருத்துக் கேட்டிருக்க வேண்டும். பா.ம.க.வின் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் தன்னிச்சையாக தடையை அகற்றியிருப்பதை ஏற்க முடியாது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், விடுதிகளில் உள்ள குடிப்பகங்களையும் மூட வேண்டும் என்று திசம்பர் 15-ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து குடிப்பகங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று மது லாபி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போது, ‘‘சாலையோர மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டதன் நோக்கமே குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். இத்தகைய சூழலில் குடிப்பகங்களுக்கு மட்டும் விலக்களித்தால், இந்தத் தீர்ப்பின் மூலம் எந்த நோக்கத்தை எட்டுவதற்கு திட்டமிட்டிருந்தோமோ அந்த நோக்கமே சிதைந்து விடும். எனவே, தீர்ப்பை மாற்ற முடியாது. அது தொடரும்’’ என்று கூறி, அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நிராகரித்திருந்தார். அப்போது உண்மையாகவே அவரது சமூக அக்கறைக்கு தலை வணங்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால், இப்போது அதே நீதிபதி அதற்கு மாறாக தீர்ப்பளித்திருப்பது வியப்பளிக்கிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டதன் நோக்கமே சாலை விபத்துக்களைக் குறைக்க வேண்டும் என்பது தான். இதிலிருந்து நகர்ப்புற நெடுஞ்சாலையோர மது வணிகத்திற்கு மட்டும் விலக்களிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. சென்னையிலிருந்து ஒருவர் பெங்களூருக்கு மகிழுந்தில் செல்வதாக வைத்துக் கொள்வோம். உச்சநீதிமன்றம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பின்படி அவரால் வேலூரில் ஏதேனும் ஒரு நெடுஞ்சாலையோர மதுக்கடையிலோ, குடிப்பகத்திலோ மது அருந்த முடியும். அவ்வாறு மது அருந்தி விட்டு போதையுடன் பெங்களூருக்கு பயணத்தைத் தொடரும் போது அவரது மகிழுந்து விபத்தில் சிக்காது என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா? மாநகர மதுக்கடைகளிலும், குடிப்பகங்களிலும் போதை கொடுக்காத மதுவா விற்கப்படுகிறது?
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி தமிழகத்தின் நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட 1700 மதுக்கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. யார் குடி எங்கு கெட்டாலும் அரசுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பற்ற விபரீத சிந்தனையின் வெளிப்பாடு தான் இதுவாகும். தமிழக அரசின் மது சிந்தனையை மாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சிந்தனைக்காக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.