”மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துவிட்டன மத்திய, மாநில அரசுகள்": ராமதாஸ்

குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பாமக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை மத்திய அரசும், மாநில அரசும் போட்டிப்போட்டுக் கொண்டு சிதைத்துள்ளதாகவும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துள்ளதாகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் செவ்வாய் கிழமை வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியா முழுவதும் சமச்சீரானப் பாடத்திட்டம் இல்லாத நிலையில், மருத்துவப் படிப்புக்காக நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 12-ஆம் வகுப்பு பயில்வோரின் எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே. அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயில்வோரின் எண்ணிக்கை 1.56 கோடி ஆகும். தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 10 லட்சம் பேர் பயின்றாலும் அவர்களில் 90% அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் தான் பயில்கின்றனர்.

ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் தான் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வும், மாணவர் சேர்க்கை முறையும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நீட் தேர்வு முழுக்க முழுக்க சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதாலும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேருவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. மொத்தத்தில் நீட் தேர்வு என்பது ஏழை, ஊரக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாதவாறு போடப்பட்ட தடுப்பு வேலியாகும்.”, என குறிப்பிட்டார்.

மேலும், ”கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2318 மருத்துவ இடங்கள் நிரப்பப் பட்டன. அவற்றில் 2279 இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 3 இடங்களும், பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன. இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படவுள்ள 3377 இடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு கிடைக்கும். இது கடந்த ஆண்டை விட 200 மடங்கு அதிகமாகும். அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு பெற்ற இடங்களில் 90% இடங்களை இழப்பார்கள். இந்த அநீதியை களையும் வகையில் கொண்டு வரப்பட்ட மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கான 85 சதவீத ஒதுக்கீட்டுக்கும் சட்டப் பாதுகாப்பு பெறாமல் மாநில அரசு துரோகம் செய்து விட்டது.”, என தெரிவித்தார்.

இத்தனை சிக்கலுக்கும் காரணம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற தமிழக அரசு தவறிவிட்டது தான் எனவும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழக மாணவர்களின் நலன்களை மத்திய அரசிடம் தமிழக அரசு நிரந்தரமாக அடகு வைத்து விட்டது எனவும் ராமதாஸ் தம் அறிக்கையில் குறிப்பிட்டார்.

மேலும், ”தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் போது அதன் மீது நடவடிக்கை எடுப்பதும், எடுக்காததும் மத்திய அரசின் விருப்பம். ஆனால், சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப்படும் போது அதற்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிராகரிப்பது என ஏதேனும் ஒரு வகையில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், சட்டம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது வரை அதன் மீது முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கும், சட்டப்பேரவைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். இதை எதிர்த்துக் கேள்விக் கேட்பதற்குக் கூட துணிச்சல் இல்லாமல் தமிழக அரசு மண்டியிட்டுக் கிடப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோரும், பொதுமக்களும் இந்த அறவழி உண்ணாநிலைப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று சமூகநீதிக்காக குரல் கொடுக்க அழைக்கிறேன்.”, என தம் அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

×Close
×Close