காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை ஏமாற்றி வாங்க கர்நாடக அரசு முயற்சித்து வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளிட்ட செய்தி அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளரிடம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி கர்நாடக அரசு அனுப்பிய விரிவான அறிக்கையில் தவறான தகவல்களை குறிப்பிட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வழங்க முடியும் என மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு கூறியிருப்பதாகவும், மேகேதாட்டு அணையில் இருந்து பெங்களூருக்கு குடிநீருக்காக வழங்கவிருக்கும் 16.1 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே எடுக்கப்படும் என கர்நாடக அரசு கூறியிருப்பதாக ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் காவிரியில் 171.73 டி.எம்.சி நீரை கர்நாடகத்தால் சேமித்து வைக்க முடியும் எனவும், இந்த அளவு அணையின் கொள்ளளவான 93.74 டி.எம்.சியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார். இதனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீரை தேக்கி வைத்து சொந்தத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வது தான் கர்நாடகத்தின் நோக்கம் என அவர் சாடினார்.
தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காகத் தான் புதிய அணை கட்டப்போவதாக மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு கர்நாடக அரசு போலி வாக்குறுதி அளித்திருப்பதாக குறிப்பிட்ட ராமதாஸ், அதை கர்நாடகம் ஒருபோதும் செயல்படுத்தாது எனவும் தெரிவித்தார்.
மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியை 3 முறையும், நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை 2 முறையும் நேரில் சந்தித்து பேசியதாகவும், இருவருக்கும் பலமுறை கடிதம் எழுதியதாகவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டார். இதுதொடர்பாக 18.03.2015, 29.04.2015 ஆகிய தேதிகளில் எழுதிய கடிதங்களுக்கும், 03.03.2015 அன்று மக்களவையில் ஆற்றிய உரைக்கும் பதிலளித்து 09.06.2015 அன்று அன்புமணி ராமதாஸ்-க்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி கடிதம் எழுதியதாக அவர் குறிப்பிட்டார்.
அக்கடிதத்தில், ‘‘மேகேதாட்டு அணைக்காக விரிவான திட்ட அறிக்கை கர்நாடக அரசிடமிருந்து மத்திய நீர்வள ஆணையத்திற்கு கிடைக்கும் பட்சத்தில், அதை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் எட்டாவது பிரிவின்படி மத்திய அரசு ஆராயும். காவிரி ஆறு மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறு என்பதால், மேகேதாட்டு அணை குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் ஒப்புதலைப் பெற்று விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்திருந்தால் மட்டுமே அதை பரிசீலிப்போம். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவோம்’’ என்று அமைச்சர் உமாபாரதி வாக்குறுதி அளித்திருந்ததாக ராமதாஸ் குறிப்பிட்டார். கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசின் ஒப்புதல் கடிதம் எதுவும் இணைக்கப்படாத நிலையில், அதை மத்திய அரசு கர்நாடகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், கர்நாடகத்தின் இனிப்பு வார்த்தைகளை நம்பி மத்திய அரசு ஏமாந்து விடக்கூடாது எனவும், தமிழக அரசும் இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல்பட்டு கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார்.