Advertisment

குட்கா ஊழல்! அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வரால் கூட நீக்க முடியாது: ராமதாஸ்!

குட்கா ஊழலை விசாரிப்பதற்கான சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக டி.ஜி.பி. நிலையில் உள்ள நேர்மையான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்கா ஊழல்! அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வரால் கூட நீக்க முடியாது: ராமதாஸ்!

பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், "தமிழ்நாட்டை அதிர வைத்த குட்கா ஊழல் குறித்து விசாரிப்பதற்காக ஊழல் தடுப்பு & கண்காணிப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த விசாரணையை கண்காணிக்க முழுநேர கண்காணிப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு முழு மனநிறைவை அளிக்கவில்லை.

Advertisment

சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்துள்ள தீர்ப்பை குறை கூற முடியாது. ‘‘ குட்கா ஊழல் குறித்து விசாரிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு கண்காணிப்பு ஆணையத்தின் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணைக்குள் விசாரணையை முடித்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தமிழ்நாடு கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும். குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சரோ, காவல்துறை தலைமை இயக்குனரோ அல்லது பிற அதிகாரிகளோ இந்த விசாரணையில் தலையிடக்கூடாது. குட்கா ஊழல் குறித்த வருமானவரித்துறை விசாரணை அறிக்கை காணாமல் போனது குறித்தும் சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

விசாரணையை கண்காணிப்பதற்காக மாநில கண்காணிப்பு ஆணையர் பதவியை நிரப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் ஆணை நல்ல நோக்கம் கொண்டது தான் என்றாலும் ஆட்சியாளர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து தப்பிக்கும் திறமை பெற்றவர்கள். அதனால் தான் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நடைபெறும் விசாரணையிலிருந்து குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் சாதாரணமான ஆட்கள் அல்ல. அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வராலேயே நீக்க முடியாத அளவுக்கு வலிமையான பின்னணி கொண்டவர். மேலும் காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) நிலையில் உள்ள இரு அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது. இந்த ஊழலை விசாரிக்கவுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் தலைவராக இருப்பவரே கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர்(ஏ.டி.ஜி.பி) நிலையில் உள்ள அதிகாரி தான். இப்பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுக்கள் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி) முதல் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) நிலையிலுள்ள அதிகாரிகள் தலைமையில் தான் செயல்படுகின்றன.

இவர்களில் யாரை சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக நியமித்தாலும், அவர்கள் காவல்துறை தலைமை இயக்குனரின் கீழ்` பணியாற்றும் அதிகாரிகளாகத் தான் இருப்பார்கள். அவர்களால் தங்களின் உயரதிகாரியான காவல்துறை தலைமை இயக்குனர் மீதான குற்றச்சாற்றை சுதந்திரமாக எவ்வாறு விசாரிக்க முடியும்?

இத்தகைய சூழலில் இந்த விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு இரு வழிகள் மட்டுமே உள்ளன. முதலாவது இந்த வழக்கை தமிழக அரசே தானாக முன்வந்து சி.பி.ஐக்கு மாற்றுவது, இரண்டாவது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் இயக்குனராக டி.ஜி.பி நிலையில் உள்ள அதிகாரியை அமர்த்தி அவரையே விசாரணை அதிகாரியாக நியமிப்பது ஆகும். டி.ஜி.பி. நிலையில் உள்ள ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் போது அவர் யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக விசாரணை நடத்த முடியும்.

எனவே, குட்கா ஊழல் குறித்து விசாரிப்பதற்கான சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக டி.ஜி.பி. நிலையில் உள்ள நேர்மையான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

அதேபோல், கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு முழுநேரமாக மூத்த இ.ஆ.ப. அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் ஒரு சில மாதங்களைத் தவிர மீதமுள்ள காலங்களில் இப்பதவி தலைமைச் செயலர் அல்லது உள்துறை செயலரிடம் கூடுதல் பொறுப்பாகவே இருந்து வந்திருக்கிறது. உயர்நீதிமன்ற அறிவுரையை ஏற்று தலைமைச் செயலர் நிலையில் உள்ள நேர்மையான அதிகாரி ஒருவரை கண்காணிப்பு ஆணையராக அமர்த்த வேண்டும்.

தமிழகத்தில் அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் ஊழல் புகார்கள் எழுவது அதிகரித்து வருகிறது. இத்தகையக் குற்றச்சாற்றுகள் அனைத்துக்கும் முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. உதாரணமாக குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் மீதான ரூ.12 கோடி ஊழல் புகார் குறித்து அவரிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கோரியிருக்கிறது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை தான் இவை வலியுறுத்துகின்றன. எனவே, தமிழகத்தில் உடனடியாக லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Pmk Ramadoss Minister Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment