தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 48 மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு 2016-17 ஆம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.86.33 கோடி என சட்டப்பேரவை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்திருப்பது, தமிழகத்தில் மணல் கொள்ளை மற்றும் ஊழல் அதிகரித்து வருவதை காட்டுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சரக்குந்து மணல் வெட்டி எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார். அதனால், மணல் குவாரிகள் மூலம் 2016-2017 -ஆம் ஆண்டில் 48 மணல் குவாரிகள் மூலம் ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைத்ததாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்தது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என கடுமையாக விமர்சித்தார்.
இதனால், தமிழக அரசு குறிப்பிட்ட தொகையை விட மணல் விற்பனை மூலம் 500 மடங்கு கூடுதல் வருவாய் கிடைப்பதாக அவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும், சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர்
கடந்த 2016-ஆம் ஆண்டு சோதனை நடத்தியபோது, ரூ.33.60 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள், ரூ.140 கோடி பணமும், 180 கிலோ தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அவை அனைத்தும் மணல் குவாரிகளில் இருந்து 25 நாட்களில் கிடைத்த வருமானம் என்று சேகர் ரெட்டி தரப்பில் விசாரணையில் கூறப்பட்டதாக ராமதாஸ் தெரிவித்தார்.
இதனால், சேகர் ரெட்டிக்கு மணல் குவாரிகளிலிருந்து ஒரு நாளுக்கு சராசரியாக ரூ.1.35 கோடி வருமானம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார். இரு மாவட்டங்களில் மட்டுமே மணல் அள்ளும் பணியில் ஈடுபடும் சேகர்ரெட்டி நிறுவனம், ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் ஈட்டும் போது, அரசுக்கு ஆண்டுக்கு ரூ.86 கோடி மட்டும் தான் வருவாய் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என சாடினார்.
மேலும், ஆண்டுக்கு ஆண்டு மணல் தேவை அதிகரித்துவரும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில், 2011-12-ஆம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.188.03, 2012-13ஆம் ஆண்டில் வருவாய் ரூ.188 கோடி, அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்ததாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு மணல் விற்பனை மூலம் ரூ.100 கோடி வருவாயும், ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருவாயும் கிடைப்பதாகவும்,
ஆளுங்கட்சியினர் மணல் வியாபரம் மூலம் ஊழலில் ஈடுபடுவதாலேயே ரூ.86.33 கோடி மட்டும் இந்தாண்டு கிடைத்ததாகவும் குறிப்பிட்டார். அதனால், மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.