பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கோ, பொதுப்பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் இரமேஷ் சந்த் கூறியிருக்கிறார். மாநில உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்ட இப்பரிந்துரை கண்டிக்கத்தக்கது.
விவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக நிதி ஆயோக் அமைப்பு கூறியுள்ள காரணம் வினோதமாக உள்ளது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்லும் கடிதங்களைக் கையாளும் அஞ்சல் நிலையங்கள் மத்திய பட்டியலில் இருப்பதாகவும், வேளாண் விளைபொருட்கள் ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதால் விவசாயத்தையும் மத்தியப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூறியிருக்கிறது. மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளை மத்தியப் பட்டியலுக்கு மாற்றுவதற்காக நிதி ஆயோக் கண்டுபிடித்துள்ள அளவீடு விசித்திரமாக உள்ளது. இந்த அளவீட்டை அடிப்படையாகக் கொண்டால் இந்தியாவில் அனைத்துத் துறைகளும் மத்தியப் பட்டியலுக்குத் தான் மாற்றப்பட வேண்டும்; உலகெங்கும் நிறைந்திருக்கும் காற்றை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகார வரம்புக்குள் தான் கொண்டு செல்ல வேண்டும். மத்திய, மாநிலப் பட்டியல்கள் தேவைகள் மற்றும் நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, மாநில எல்லைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடாது; அது தவறானதாகும்.
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அவற்றை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நிதி ஆயோக் முன்வைக்கும் அளவீட்டின் அடிப்படையில் பார்த்தால், மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகள் எப்போதோ தேசியமயமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யாத நிதி ஆயோக் அமைப்பு விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்றத் துடிப்பது சரியல்ல.
இந்தியாவில் எந்தத் துறையையும் ஒரு பட்டியலில் இருந்து இன்னொரு பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசுக்கும், நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் உண்டு. ஆனால், அதற்கான தேவைகளும், நியாயங்களும் இருக்க வேண்டும். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்த காலத்தில் 1976-ஆம் ஆண்டில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அப்போது கூட கல்வி மற்றும் சுகாதாரத்தை தொலைதூரப் பகுதிகளுக்கு மாநில அரசால் கொண்டு செல்ல முடியவில்லை என்பதைக் காரணம் காட்டித் தான் அவைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டனவே தவிர, நிதி ஆயோக் அமைப்பு முன்வைக்கும் அளவீட்டின் அடிப்படையில் அல்ல.
மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படுவதால் விவசாயத்திற்கு ஏதேனும் நன்மை கிடைக்குமென்றால் அதை பட்டியல் மாற்றம் செய்வதில் தவறு இல்லை. மாறாக மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் விவசாயம் முற்றிலுமாக அழிந்தும் விடும். விவசாயம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும் கூட, விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு தான் நிர்ணயிக்கிறது. அத்துடன் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 50 ரூபாயும், ஒரு டன் கரும்புக்கு ரூபாயும் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு வகை செய்கிறது. ஆனால், இந்த ஊக்கத்தொகையை உழவர்களுக்கு வழங்கக்கூடாது என்று மத்திய அரசு தடுக்கிறது.
அதுமட்டுமின்றி, உழவர்கள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கூடாது என்பது தான் மத்திய அரசின் கொள்கையாகும். விவசாயம் சார்ந்த மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கும் போது, விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்றினால் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும். வேளாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான ஒப்பந்தங்களை உலக வர்த்தக அமைப்புடன் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. அவற்றையும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடவும் மாநில அரசுகள் தடையாக இருப்பதால் தான் விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு துடிக்கிறது. அதற்கான கருவியாக நிதி ஆயோக்கை பயன்படுத்திக் கொள்கிறது.
நிதி ஆயோக் அமைப்பின் செயல்பாடுகள் தாராளமயமாக்கலுக்கு எதிரானதாகவும், ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கும் என்பதால் அந்த அமைப்பை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. நிதி ஆயோக் அமைப்பின் மீதான பா.ம.க.வின் மதிப்பீடு இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அத்துடன் நிதி ஆயோக் அமைப்பையும் மத்திய அரசு கலைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.