காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், 15 வருடங்களுக்கு முன் மறைந்த தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்திக்கு, பாமக தலைவர் ஜி.கே.மணி இந்தாண்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாநில காங்கிரஸின் தலைவராகவும், ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும், இருமுறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, 1992-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டது. இதனால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தமிழக மக்கள் மத்தியில் பெயர் பெற்றார்.
பின் காங்கிரஸிலிருந்து விலகி திவாரி காங்கிரஸில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார். பின் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். 1998-99ல் வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2001ல் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்த ராமமூர்த்தி, 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்த நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்தாண்டு தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து வாழப்பாடி ராமமூர்த்திக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அந்த கடிதத்தை, ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, "பதினைந்து வருடங்களுக்கு முன்னர் மறைந்த எனது தந்தையாருக்கு, இந்த வருடம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனுப்பிய திரு ஜி.கே.மணி அவர்களுக்கு நன்றி !!" என்று குறிப்பிட்டுள்ளார்.