அதிமுக ஊழலின் உச்சம்: ஆந்திராவுக்கு சென்ற 'கியா' மகிழுந்து தொழிற்சாலை - ராமதாஸ்

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் தமிழக அமைச்சர் மீது தில்லியில் உள்ள தமது நாட்டு தூதரகத்தில் புகார் செய்திருக்கிறது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அருகே ரூ.10,000 கோடி செலவில் ஆண்டுக்கு 3 லட்சம் மகிழுந்துகளை தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலையை அமைக்க ஒப்புக்கொண்டிருந்த கியா மகிழுந்து நிறுவனம், இப்போது அத்திட்டத்தை கைவிட்டு, ஆந்திராவில் தொழிற்சாலை தொடங்க முன்வந்திருக்கிறது. இதற்குக் காரணம் தமிழக ஆட்சியாளர்கள் கேட்ட அளவுக்கு அதிகமான கையூட்டு தான் என்பது வெட்கக்கேடானதாகும்.

தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா, கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாடு, மராட்டியம் குஜராத், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் தொழில் தொடங்குவது குறித்து கியா நிறுவனம் ஆய்வு செய்து வந்தாலும் கூட, தாய் நிறுவனமான ஹுண்டாய் திருப்பெரும்புதூரில் அமைந்திருப்பதால் அதையொட்டி தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் அதன் விருப்பமாக இருந்தது. இதுதொடர்பாக அரசுக்கும், கியா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டு, கியா மகிழுந்து தொழிற்சாலை அமைக்க 390 ஏக்கர் நிலம் வழங்குவதற்கும் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து 11.08.2016 அன்று சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது.

இதனால் கியா மகிழுந்து ஆலை தமிழகத்தில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஆலை ஹைதராபாத்- பெங்களூர் நெடுஞ்சாலையில் அனந்தப்பூர் என்ற இடத்தில் அமையவுள்ளது. தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்கும் திட்டத்தை கியா கைவிட்டதற்கு காரணம் ஆட்சியாளர்கள் தரப்பில் கோரப்பட்ட கையூட்டு தான் என்பதை கியா நிறுவனத்தின் தமிழக ஆலோசகராக செயல்பட்ட இன்ஃப்ராடெக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் ராமசாமி கூறியுள்ளார். ‘‘ 390 ஏக்கர் நிலத்திற்கான அதிகாரப்பூர்வ விலையை விட 50% கூடுதல் தொகை கையூட்டாக தரப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கோரினார்கள். வரி விடுமுறை, மின் கட்டணச் சலுகை, சாலைகள், தண்ணீர், கழிவு நீர் வெளியேற்றும் வசதி, திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல் உள்ளிட்ட சலுகைகளை கியாகேட்டபோது, அதற்குத் தனியாக பெருந்தொகையை கையூட்டாகத் தரும்படி ஆட்சியாளர்கள் கேட்டனர். அதனால் தான் கியா வெளியேறியது’’ என்று கண்ணன் ராமசாமி குற்றஞ்சாற்றியிருக்கிறார்.

ஆந்திராவில் கியா மகிழுந்து ஆலை அமைக்கப்படவுள்ள அனந்தப்பூர் வசதி குறைந்த பகுதி தான் என்றாலும், அந்த நிறுவனம் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒரு பைசா கையூட்டு இல்லாமல், முழுமையாக ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் தான் கியா நிறுவனம் தமிழகத்தை விடுத்து ஆந்திரத்தை தேர்ந்தெடுத்ததாகவும் ராமசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் அதிமுக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும். தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடம் தமிழகம் தான் என்றாலும் வசதி குறைந்த ஆந்திரத்தை கியா தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இங்கு கையூட்டு தலைவிரித்தாடுவதும், ஆந்திராவில் அது இல்லை என்பதும் தான். தமிழகத்திற்கு தானாக வரும் முதலீடுகளைக் கூட அதிமுக அரசு துரத்தியடிக்கிறது; வராத முதலீட்டை ஆந்திரம் வரவேற்றுக் கொண்டு செல்கிறது என்பது தான் ஆந்திரம் வளர்வதற்கும், தமிழகம் தேய்வதற்கும் காரணம் ஆகும். தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் 2015-ஆம் ஆண்டில் 12-ஆவது இடத்தில் இருந்த தமிழகம் 2016-ஆம் ஆண்டில் 18ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு காரணமும் இது தான். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனுமதியளிப்பதில் நடைபெறும் ஊழல் குறித்தும், இதனால் பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு வராமல் பிற மாநிலங்களுக்கு செல்வதையும் கடந்த ஐந்தாண்டுகளாகவே பா.ம.க. ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் பா.ம.க. முன்வைத்த குற்றச்சாற்றுகள் உண்மை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

கியா தமிழகத்தில் எங்கு ஆலை அமைத்தாலும், அதற்கு தேவையான சில்லரை உதிரி பாகங்களை தயாரித்து வழங்க 72 சிறு, குறு தொழிற்சாலைகளை அமைக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தன. அதனால் தமிழகத்தில் 10,000 பேருக்கு நேரடியாக வேலை கிடைத்திருக்கும். ஆனால், ஆட்சியாளர்களின் ஊழல் வெறியால் தொழில் வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் தொடர்ந்து பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, அதிமுகவினரின் ஊழலால் தமிழகத்தின் மானம் உள்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கப்பலேற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தொழிற்சாலை அமைத்துள்ள ஐரோப்பிய நிறுவனத்தின் பிரதிநிதிகளை அண்மையில் அழைத்த தமிழகத்தின் மூத்த அமைச்சர் கோடிக்கணக்கில் கையூட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் தமிழக அமைச்சர் மீது தில்லியில் உள்ள தமது நாட்டு தூதரகத்தில் புகார் செய்திருக்கிறது. அதை தங்கள் நாட்டு ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற தூதரகம், பிரதமர் நரேந்திர மோடியிடமும் முறையீடு செய்துள்ளது. இதனால் அந்த அமைச்சருக்கு விரைவில் நெருக்கடி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

ஊழலில் திளைத்தவர்களால் ஒரு நிமிடம் கூட ஓய்வாக இருக்க முடியாது என்பதைப் போல தமிழக ஆளுங்கட்சியினர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஊழல் செய்து கொண்டே இருக்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் பிற மாநிலங்களுக்கு வெளியேறிவிடும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க, கடந்த காலங்களில் தொழில் தொடங்க அனுமதி வழங்கியதில் நடந்த ஊழல்கள் குறித்து நடுவண் புலனாய்வுப்பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close