”ஓவியாவிற்கு பதில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன்”: அன்புமணி

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு வாக்களித்து காப்பாற்றிய மக்கள், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு வாக்களித்திருந்தால் தமிழ்நாட்டை தான் காப்பாற்றியிருப்பேன் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை சமீப நாட்களாக எழுப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஜூலியை மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்துதல், நடிகை ஓவியா ஆரவை காதலிப்பதுபோன்ற நிகழ்வுகள், நடிகர்கள் கஞ்சா கருப்பு, பரணி இடையேயான வாக்குவாதம் என பார்வையாளர்களை எப்போதும் பரபரப்பாகவே ’பிக் பாஸ்’ வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த வார நிகழ்ச்சியில் 1.5 கோடி மக்கள் ஓவியா மற்றும் பரணிக்கு வாக்களித்து காப்பாற்றினர். அதில், ஓவியாவுக்கு அதிகபட்சமான ஓட்டுகள் பதியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடையேயும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “நடிகை ஓவியாவிற்கு ஓட்டுப்போட்டு அவரை காப்பாற்றிய மக்கள், எனக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்திருந்தால் நான் தமிழகத்தைக் காப்பற்றியிருப்பேன்”, என நகைச்சுவையாக பேசினார்.

×Close
×Close