Advertisment

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லையா? அன்புமணி ராமதாஸ்

குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் சாதாரண அலுவலக உதவியாளர் பணிக்குக் கூட தேர்வு செய்யப்படுவதில்லை.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக பிரச்சனையை நடிகரால்  தீர்க்க முடியாது... ரஜினிகாந்த் பாமக-வுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை மற்றும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 பேரின் பெயர்களையும் ஆளுநர் நிராகரித்து விட்டதாகவும், இனிவரும் காலங்களில் புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இவை ஓரளவு வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான் என்றாலும், இந்த செய்திகள் பரபரப்பாக்கப்படுவதன் பின்னணியில் சென்னை மற்றும் காமராசர் பல்கலைக்கழக முறைகேடுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடுகளை தடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்பட்டாலும், அவை தொடருகின்றன என்பது தான் உண்மை. குறிப்பாக மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.செல்லத்துரை அந்தப் பதவிக்கு சிறிதும் தகுதியற்றவர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், செல்லத்துரைக்கு கற்பித்தல் அனுபவமே கிடையாது. செல்லத்துரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். அதன்பின் இளைஞர் மேம்பாட்டு இயக்குனராக பணியாற்றினார்.

2004-05 ஆண்டு காலத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றிய போது, இவரது செயல்பாடுகளுக்கு பல்கலைக்கழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இவரது செயல்பாடுகளில் கடும் அதிருப்தி அடைந்த அப்போதைய துணைவேந்தர், ஒன்றரை ஆண்டுகளிலேயே இவரை பதவி நீக்கம் செய்தார். அதன்பின் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், பின்னர் மீண்டும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் இவர் பணியாற்றிய போதும் கூட ஆசிரியராக பணியாற்றவில்லை. இதற்கெல்லாம் மேலாக மதுரைக் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் பணியாற்றிய போது, அவரது தவறுகளையும், ஊழல்களையும் சுட்டிக்காட்டும் பேராசிரியர்களையும், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களையும் மிரட்டும் அடியாளாக செயல்பட்டார்.

துணைவேந்தர் கல்யாணியின் ஊழல்களை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக பாதுகாப்புக்குழுவின் அமைப்பாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான சீனிவாசனை கூலிப்படையை ஏவி, கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(பி), 324, 109, 307 ஆகிய பிரிவுகளில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.

அந்த நேரத்தில் செல்லத்துரை தலைமறைவாக இருந்ததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இன்று வரை அவர் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படவில்லை. இத்தகைய அவலங்களுக்கும், அவப்பெயர்களுக்கும் சொந்தக்காரரான செல்லத்துரையை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்ததன் மூலம் அப்பல்கலைக்கழகத்தின் எதிர்காலமும், கல்வித்தரமும் காவு கொடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.

துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூவரிடமும் நேர்காணல் நடத்தி, அவர்களில் தகுதியான ஒருவரை ஆளுநர் தேர்வு செய்ததாக ஆளுநர் மாளிகை அறிவித்திருக்கிறது. குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் சாதாரண அலுவலக உதவியாளர் பணிக்குக் கூட தேர்வு செய்யப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது, துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதைக் கூட அறியாமல் அவரை நியமனம் செய்ய ஆளுநர் ஆணை பிறப்பித்திருப்பதைப் பார்க்கும் போது, அந்த நேர்காணல் நடைமுறையையும், அதை நடத்திய தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரின் நேர்மையையும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள துரைசாமியின் கல்வித்தகுதியில் எந்த குறையும் இல்லை. ஆனால், துரைசாமியை விட தகுதியும், திறமையும் மிக்க பலரின் பெயர்கள் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களை விடுத்து இவருக்கு பதவி வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

இன்னும் கேட்டால் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக முதலில் பரிந்துரைக்கப்பட்ட மூவர் பட்டியலில் துரைசாமியின் பெயர் இல்லை. மாறாக, பேராசிரியர்கள் வேல்முருகன், தாண்டவன், தேவராஜ் ஆகியோரின் பெயர்கள் மட்டும் தான் இருந்தன. இவர்களில் வேல்முருகனும், தேவராஜும் அதிக கல்வித்தகுதியும், திறமையும், அனுபவமும் பெற்றவர்கள் ஆவர்.

ஆனால், முதலமைச்சர்ஃஎ அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக தேவராஜ், வேல்முருகன் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக துரைசாமி, சச்சிதானந்தம் ஆகிய பெயர்கள் சேர்க்கப்பட்டு, அப்பட்டியலில் இருந்து துரைசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க விரும்பும் ஆளுநர் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லையா?

துணைவேந்தர்கள் நியமனத்திற்காக தேர்வுக்குழு அமைப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. துணைவேந்தர்கள் நியமனம் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ளப்பட என்பன உள்ளிட்ட விதிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், துணைவேந்தர்கள் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

தேர்வுக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அனைவருமே நேர்மையானவர்கள் அல்ல என்பதால் இந்த விதி தவறானவர்களின் கைகளுக்கு அதிகாரம் செல்வதற்கு வழிவகுத்து விடும். அதுமட்டுமின்றி, தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர்களோ, முதல்வர்களோ துணைவேந்தர் தேர்வுக்குழுவில் இடம்பெறக்கூடாது என்பதும் சட்டத்தின் அங்கமாக இருக்க வேண்டும்.

எனவே, சென்னை மற்றும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன், துணைவேந்தர்கள் நியமனம் சட்டத்தில் மேலும் பல பிரிவுகளைச் சேர்த்து தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Vice Chancellor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment