அரசு கட்டுப்பாட்டில் போயஸ் கார்டன் பங்களா : தனியார் பாதுகாவலர்கள் அகற்றம்

போயஸ் கார்டன் பங்களா, அரசு கட்டுப்பாட்டில் வந்தது. அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

போயஸ் கார்டன் பங்களா, அரசு கட்டுப்பாட்டில் வந்தது. அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகும், அவரது தரப்பால் நியமிக்கப்பட்ட தனியார் பாதுகாவலர்கள் அங்கு தங்கள் பணியை கவனித்து வந்தனர். இரு மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் இல்லத்திற்கு சென்றபோது அங்கிருந்து விரட்டப்பட்டார்.

இந்தச் சூழலில் நேற்று (ஆகஸ்ட் 17) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ஜெ.மரணத்திற்கு நீதி விசாரணை அறிவித்ததோடு போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கி ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக்குவதாகவும் கூறினார். இந்த அறிவிப்புக்கு தீபா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது சகோதரர் தீபக், ‘அந்த சொத்தின் வாரிசுகள் என்ற அடிப்படையில் எங்களிடம் கருத்து கேட்டு செய்திருக்கலாம். மற்றபடி, நினைவு இல்லம் ஆக்குவதை எதிர்க்கவில்லை’ என கூறியிருக்கிறார். சசிகலா குடும்பத்தினர், சட்டரீதியாக இதை எதிர்க்க முகாந்திரம் எதுவும் இல்லை.

முதல்வரின் அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் போயஸ் கார்டன் நுழைவு பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வேதா இல்ல வாசலிலும் போலீஸார் நிறுத்தப்பட்டனர். இன்று அங்கிருந்து தனியார் பாதுகாவலர்கள் முழுமையாக அகற்றப்பட்டனர். அந்த பங்களா முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் வந்தது.

பொதுவான அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது குறித்து பேசியபோது, ‘அம்மாவின் இல்லத்தை அரசு பொறுப்பேற்று நினைவு இல்லமாக்குவது சரியான நடவடிக்கை. தீபா எதிர்த்தாலும், அரசு இதை செய்து முடிக்க வேண்டும்’ என்றார்கள். ‘பொது நோக்கத்திற்காக எந்த ஒரு இடத்தையும் அரசு எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதுமானது. அந்த அடிப்படையில் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு எடுத்துக்கொண்டு, நினைவு இல்லம் ஆக்குவதில் பிரச்னை வராது. தீபாவும், தீபக்கும் நீதிமன்றம் சென்றாலும், தங்களுக்கு தேவையான இழப்பீடை வேண்டுமானால் கூடுதலாக கேட்டுப் பெற முடியும்’ என்கிறார்கள், சட்ட நிபுணர்கள்.

×Close
×Close