போயஸ் கார்டன் இல்லத்தை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஜெ.தீபா திட்டவட்டமாக கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, சாதாரண பொதுஜனங்கள் வரை பலரும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை பார்க்க சாரை சாரையாக வந்தனர். ஆனால் அப்போது சசிகலா கட்டுப்பாட்டில் இருந்த போயஸ் கார்டன் இல்லத்திற்குள் அனைவராலும் நுழைய முடியவில்லை. அப்போதே ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு எடுத்துக்கொண்டு, நினைவு இல்லமாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.
ஜெ. இல்லம் அருகே பாதுகாப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தர்மயுத்தத்தின் முதல் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது இதையும் ஒரு கோரிக்கையாக வைத்தார். காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்பட வேறு சில தலைவர்களும் இதை வலியுறுத்தினர். ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சில மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், ‘போயஸ் கார்டன் இல்லம், எனக்கும் எனது சகோதரருக்கும் சேரவேண்டிய சொத்து. அது தொடர்பாக எங்கள் விருப்பமின்றி எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்தை நாடுவோம்’ என அறிவித்தார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் இந்த கோரிக்கையை அழுத்தமாக கூறவில்லை.
ஆனால் இன்று (ஆகஸ்ட் 17) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ஜெ.மரணத்திற்கு நீதி விசாரணை அறிவித்ததோடு போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக்குவதாகவும் கூறினார். இந்த அறிவிப்பு குறித்து தீபாவும், அவரது சகோதரர் தீபக்கும் உடனடியாக ‘ரெஸ்பான்ஸ்’ செய்யவில்லை. ஆனால் இரவு 8 மணியளவில் நிருபர்களை சந்தித்த ஜெ.தீபா, “போயஸ் கார்டன் இல்லம், எங்களின் பூர்வீக சொத்து. அதை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியான நடவடிக்கைகளை நிச்சயம் நான் எடுப்பேன். எடப்பாடி பழனிசாமி தனது பதவியை காப்பாற்ற இந்த அறிவிப்பை செய்திருக்கிறார்’ என்றார். ‘குறைந்தபட்சம் எங்களுக்கு ஒரு நோட்டீஸ்கூட கொடுக்காமல் எப்படி இந்த அறிவிப்பை எடப்பாடி செய்யலாம். அந்த இல்லத்தை பராமரிக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையை விட்டுக்கொடுக்கவே மாட்டேன்’ என்றார் அவர்.
போயஸ் கார்டன் நுழைவு பகுதியில் பாதுகாப்பு
இதற்கிடையே போயஸ் கார்டன் இல்லத்தில் மாலையில் இருந்தே போலீஸ் குவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வேதா இல்ல வாசலிலும், அந்த இல்லத்திற்கு செல்லும் சாலையின் தொடக்கத்திலும் போலீஸார் நிறுத்தப்பட்டனர். பொதுவான அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது குறித்து பேசியபோது, ‘அம்மாவின் இல்லத்தை அரசு பொறுப்பேற்று நினைவு இல்லமாக்குவது சரியான நடவடிக்கை. தீபாவும், தீபக்கும் எதிர்த்தாலும், அரசு இதை செய்து முடிக்க வேண்டும்’ என்றார்கள்.
‘பொது நோக்கத்திற்காக எந்த ஒரு இடத்தையும் அரசு எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதுமானது. அந்த அடிப்படையில் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு எடுத்துக்கொண்டு, நினைவு இல்லம் ஆக்குவதில் பிரச்னை வராது. தீபாவும், தீபக்கும் நீதிமன்றம் சென்றாலும், தங்களுக்கு தேவையான இழப்பீடை வேண்டுமானால் கூடுதலாக கேட்டுப் பெற முடியும்’ என்கிறார்கள், சட்ட நிபுணர்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அரசுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் நடவடிக்கையாகவும் இந்த இரண்டு அறிவிப்புகளையும் செய்திருப்பதாக தெரிகிறது.