கைதிகளின் சொகுசு வாழ்க்கை: சேலம், கடலூர், கோவை சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை

புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புழல் சிறை உட்பட தமிழகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளி வந்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது.

அதில், ‘சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. புழல் ஜெயிலில் தண்டனை பெற்று வரும் பாகிஸ்தான் கைதியான ரசூலுதீன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.

ரசூலுதீன் மட்டுமில்லாமல் சிறையில் இருக்கும் பல கைதிகளும் ஜெயிலில் இருப்பது போல் இருக்கவில்லை. 5 ஸ்டார் ஓட்டலில் விடுமுறை நாட்களை கழிப்பது போன்று கலர்ஃபுல் ஆடைகள், அவர்கள் தங்கிருக்கும் அறைகளில் ஏசி, டிவி போன்ற வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புழல் சிறையில் இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் ஜெயிலில் நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து பேசிய அவர் பாகிஸ்தான் கைதி ரசூலுதீனுக்கு சிறப்பு வசதிகள் கொடுக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

இதனிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close