காஞ்சிபுரம் அருகே வெம்பாக்கம் அடுத்த திருப்பணமூரில் சாலையோரம் உள்ள கிணற்றில் திருடர்களால் வீசப்பட்ட 150 சவரன் அடங்கிய நகைப் பையை தீயணைப்பு படையினரும் போலீசாரும் 7 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே திருப்பணமூரில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் டி.எஸ்.பி தலைமையில் காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த், மற்றும் பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் என சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார்களின் பாதுகாப்புடன் செய்யாறு தீயணைப்பு படையினர் வந்து சாலையோரம் ஏரிக்கரை அருகே உள்ள கிணற்றில் பாதாளகுலசு போட்டு மர்மப் பொருளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வெம்பாக்கம் – ஆற்காடு சாலையில் திருப்பணமூர் ஏரிக்கரை பகுதியில் சாலையோரம் உள்ள கிணற்றில், போலீஸ் பாதுகாப்புடன் தீயணைப்பு படையினர் திடீரென இறங்கி மர்மப் பொருளைத் தேடுவதைப் பார்த்த அவ்வழியெ சென்ற மக்கள் பலரும் என்ன விவரம் என்று எந்த பதிலும் சொல்லாமல் அவர்களை அங்கே இருந்து விரட்டிக் கொண்டிருந்தனர். என்ன பொருள் தெரிந்து தேடப்படுகிறது என்பது யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் போலீசார் உறுதியாக இருந்தனர். தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் மர்மப் பொருளைத் தேடுவதைப் பார்க்க வந்த பொதுமக்களை போலீசார் விரட்டிக்கொண்டே இருந்தனர்.
இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 150 சவரன் நகையை திருடன் இந்த கிணற்றில் வீசிச் சென்றதாகக் கூறியதால் போலீஸார் தேடியதாக பரபரப்பு தகவல்களைத் தெரிவித்தனர்.
கடந்த வாரம், காஞ்சிபுரம்,
ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி மார்ச் 13-ம் தேதி குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் மார்ச் 21-ம் தேதி வீட்டுக்கு வந்துபார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, 150 சவரன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.5.30 லட்சம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த கொள்ள சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 4 கொள்ளையர்கள் ஈடுபட்டதாகவும் அதில் குணா என்பவரை கைது செய்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
குணாவிடம் காஞ்சிபுரம் போலீசார் அவர்கள் பாணியில் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கபட்ட நகையை, பிறகு வந்து எடுத்துக்கொள்ளலாம் என்று இந்த கிணற்றில் ஒரு பையில் வைத்து கட்டி வீசிச் சென்றதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, போலீசார் குணாவை அழைத்துக்கொண்டுவந்து அந்த கிணற்றை அடையாளம் காட்டச் சொல்லி கேட்டனர். காஞ்சிபுரம் டி.எஸ்.பி தலைமையில், காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட காவல்துறையினர் செய்யாறு தீயணைப்பு நிலைய மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் திருப்பணமூர் ஏரிக்கரை அருகே சம்பத் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதி வெம்பாக்கம் தாலுக்காவில் உள்ள பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் வருவதால் பாதுகாப்புக்கு பிரம்மதேசம் போலீசார் வந்திருந்தனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
சுமார் 45 அடி ஆழமுள்ள இந்த கிணறு ஏரிக்கரை அருகே உள்ளதால் தண்ணீர் நிறைந்து இருக்கிறது. தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 3 மணி நேரமாக பாதாளகுலசு போட்டு துழாவி தேடியும், நகைப்பை சிக்கவில்லை. இதையடுத்து, தீயணைப்பு படைவீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் கிணற்றில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு ராட்சத மோட்டார் பம்ப்களை பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி, மாலை 4 ம்ணிக்கு ராட்சத மோட்டார்பம்ப்களை கொண்டுவந்து கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றிய பிறகு, தீயணைப்பு படை வீரரர்கள் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது, 150 சவரன் நகையை பொட்டலமாகக் கட்டப்பட்ட பை கிடைத்தது. அதை போலீசார் அங்கேயே பிரிக்காமல் அப்படியே காஞ்சிபுரத்துக்கு எடுத்துச் சென்றனர். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பின் கொள்ளை போன 150 சவரன் நகை மீட்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 150 சவரன் நகையை திருடர்கள் வெம்பாக்கம் அருகே திருப்பணமூரில் சாலையோரக் கிணற்றில் வீசிச் சென்ற நிலையில், போலீசார், தீயனைப்பு வீரர்கள் உதவியுடன் 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் நகையை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“